அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட மலை கிராமத்துக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை: உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்

சென்னை: துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதத்துக்காக, தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று ஜூன் 20-ம் தேதி கூடியது. முதல்நாளான நேற்று, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, இன்றைய கூட்டத்திற்கு அதிமுகவினர் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச அனுமதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டியதோடு, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு உடையுடன் வந்தனர். கூட்டத்தின் ஆரம்பம் முதலே அதிமுகவினர் சபாநாயகருடன் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டாம் நாளான இன்று பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டவைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு, சிவசங்கர், அன்பில் மகேஸ், உள்ளிட்டோர் பதிலுரை ஆற்றி வருகின்றனர்.

வடக்கு மேலூர் பாச்சாரப்பாளையம் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை: எ.வ.வேலு

நெய்வேலி தொகுதி, வடக்கு மேலூர் பாச்சாரப்பாளையம் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சிஆர்டிபி மூலம் 2026-28 திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 வழி சாலைகள் 4 வழி சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. விபத்துகளை குறைக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து சந்திப்புகளை மேம்படுத்த முதல்வர் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிமுகவினருக்கு வகுப்புதான் எடுக்க வேண்டும்

சட்டமன்ற விதிகள் குறித்து அதிமுகவினருக்கு சபாநாயகர் வகுப்பு எடுக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார். ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானம் என்றால் என்ன? என்பது பற்றி அதிமுகவினருக்கு வகுப்புதான் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

ரூ.1000 கோடியில் பள்ளி மேம்பாட்டு பணிகள்: அன்பில் மகேஸ்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எழுப்பிய கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டம் குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தனது தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள சவாலப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 300 மாணவர்கள் பயில்வதாகவும் ஆனால் 3 கட்டிடங்கள் மட்டுமே உள்ளதால் போதிய வசதி இன்றி சிரமப்படுவதாக தெரிவித்தார். எனவே தரை தளம், முதல் தளத்துடன் 3 வகுப்பறைக கட்டிடங்கள் 2 எண்ணமும், மாணவர், மாணவிகளுக்கு கழிப்பறை கட்டிடகட்டிடங்களும் அமைத்து தரப்படுமா என்று பேரவைத் தலைவர் மூலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கருத்தை கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “உறுப்பினர் சண்முகையா மட்டுமல்லாமல், எந்தெந்த உறுப்பினர்கள் பள்ளிக் கட்டிடங்கள் குறித்து கேள்வி எழுப்பிகிறார்களோ, எங்கெல்லாம் பள்ளிக் கட்டிடங்களுக்கான தேவை இருக்கிறதோ அவை உடனடியாக நிறைவேற்றித் தரப்படும்.ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் பதில்: அமைச்சர் சிவசங்கர்

கேள்வி நேரத்தின்போது, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், “மேட்டூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. மீண்டும் இந்த போக்குவரத்து சேவையை தொடங்க அமைச்சர் முன்வருவாரா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். மாவட்டத் தலைநகரான சேலத்தில் இருந்து திருப்பதிக்கு நிறைய பேருந்துகள் இயங்குகின்றன. இவர் பெயர் சதாசிவன், இவர் பெருமாளுக்கு பேருந்து கேட்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அமைச்சர் சிவசங்கரின் இந்த பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அணைக்கட்டு தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், தனது தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை என்ற மலைக்கிராமத்திற்கு மினி பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், ”அந்த மலை கிராமத்தில் புதிய சாலை திறக்கும் போதே இந்த கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் என்னிடம் வைத்து இருந்தார். இந்த பகுதியில் ‘கட் சேஸ்’ ரக பேருந்துகள்தான் இயக்க முடியும். அந்த பேருந்துகள் வாங்கும்போது, முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும் என பதில் அளித்தார்.

 

The post அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட மலை கிராமத்துக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை: உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் appeared first on Dinakaran.

Related Stories: