கான்ட்ராக்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: சென்னை, கரூர், கோவையில் நடந்தது

சென்னை: சென்னை, கரூர், கோவையில் கான்ட்ராக்டர்கள், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை தொடர்பான ஒப்பந்தங்களை எடுத்து பணி செய்து வரும் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் பசுமை வழிசாலையில் உள்ள பிஷாப் கார்டன் பகுதியில் உட்பட 4 இடங்களில் சோதனை நடந்தது. சென்னையிலிருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட கார்களில் நேற்று காலை 6 மணியளவில் கரூர் வந்தனர்.

கரூரில் அசோக் வீடு, அரசு கட்டுமான ஒப்பந்தக்காரர் சங்கர் வீடு, தங்கராஜ் வீடு, மணியின் இரண்டு வீடுகள், சரவணனின் இரண்டு வீடுகள், பெரியசாமி வீடு, மணியின் உணவகம் உட்பட என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்றனர். இதில் அசோக் வீட்டுக்கு அதிகாரிகள் சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், வெளிக்கதவை திறந்து கொண்டு வராண்டா பகுதிக்கு, ஒரு பெண் அதிகாரி உட்பட நான்கு பேர் சென்றனர். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த அவர்களது ஆதரவாளர்கள், உள்ளே சென்ற அதிகாரிகளை பார்த்து, ‘பூட்டியிருக்கும் வீட்டுக்குள் எப்படி நுழைவீர்கள், வீட்டில் உள்ளவர்கள் வந்ததும் உள்ளே செல்லலாம், அதுவரை வெளியே வாருங்கள்’ என்று கோஷம் எழுப்பினர். அப்போது ஒரு அதிகாரி, கையில் பையுடன் உள்ளே செல்ல முயன்றார். அவரை அவர்கள் சூழ்ந்து கொண்டு, பையை திறந்து காட்டுங்கள் எனக் கூறி வாக்குவாதம் செய்தனர்.

அப்போது வெளியே நின்று கொண்டிருந்த வருமான வரித்துறையினர் வந்த காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் சைடு மிரர் உடைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார், வருமான வரித்துறையினரை மீட்டு காரில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த தகராறில், குமார் என்பவர் காயமடைந்து மயங்கி விழுந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு சிலரது வீடுகளில் மட்டும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மற்ற இடங்களில் பிரச்சனை நடப்பதை அறிந்து அவர்களும் சோதனையை நிறுத்தி விட்டு திரும்பிச் சென்றனர். வருமான வரித்துறையினர் சென்ற ஒரு சில இடங்களை தவிர மற்ற பகுதிகளில் எல்லாம் அவர்களது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் வேறு வழியின்றி வருமான வரித்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

பிறகு எஸ்பி அலுவலகத்துக்கு சென்று எஸ்பி சுந்தரவதனம் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பிறகு 12.30 மணியளவில் ஒரு சில கார்களில் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றனர். கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ஒப்பந்ததாரர் செந்தில் கார்த்திகேயன் வீட்டில் நேற்று 5க்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதேபோல், கோவை ரேஸ்கோர்ஸ் தனியார் அப்பார்ட்மெண்டில் உள்ள காயத்ரி என்பவரது வீடு, தொண்டாமுத்தூர் கெம்பனூர் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவ்வாறு 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் பெரிய அளவில் ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும், 2022-23ம் ஆண்டு வருமான வரியில் அளிக்கப்பட்ட கணக்குகளை வைத்து இந்த சோதனை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை குறிவைத்து இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருவதாக பல அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கரூரில் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள்
கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவரின் வீட்டுக்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகள், வீடு பூட்டப்பட்டிருந்ததால், ஒரு சில அதிகாரிகள், சுற்றுச்சுவரில் ஏறி தாவி உள்ளே சென்றனர். அதிகாரிகள் சுவர் ஏறிச் சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

காவல்துறைக்கு தகவல் இல்லை
கரூர் எஸ்பி சுந்தரவதனம் கூறுகையில், ‘வருமான வரித்துறையினர் இதுபோன்ற சோதனைகளுக்கு வரும் போது, சிஆர்பிஎப் போலீசாரை பாதுகாப்புக்கு அழைத்து வருவார்கள். முறைப்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், கரூருக்கு வந்த வருமான வரித்துறையினர் சிஆர்பிஎப் போலீசாரை அழைத்து வரவில்லை. வருகை குறித்து முறையாக எங்களிடமும் தெரிவிக்கவில்லை. ராமகிருஷ்ணபுரம் பகுதியில் நடைபெற்ற பிரச்னை குறித்து கேள்விப்பட்டு, போலீசார்தான் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளுடன் 2 ஏடிஎஸ்பி, 5 டிஎஸ்பி, 9 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 180 போலீசார் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், பாதுகாப்பு கேட்டாலும் கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்படுவர்’ என்றார்.

The post கான்ட்ராக்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: சென்னை, கரூர், கோவையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: