எனக்கு 30 குழந்தைகள்!

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகள் தெய்வத்திற்கு இணையானவர்கள். அதிலும் சிறப்புக் குழந்தைகள் கடவுளாகவே வழிபட வேண்டியவர்கள். இவர்களை மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் சிறப்பான முறையில் கவனிக்க வேண்டும். மேலும் இவர்களால் சாதாரண பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாது. அவர்களுக்கு என உள்ள சிறப்புப் பயிற்சி முகாம்களில் பயிற்சி அளிக்க முடியும். காரணம், ஒவ்வொரு குழந்தைகளின் மனநிலையும் ஒன்று போல் இருக்காது.

சாதாரண குழந்தைகளுக்கே அவ்வாறு இல்லாத போது, சிறப்புக் குழந்தைகளுக்கு முற்றிலும் தனிப்பட்ட கவனம் அவசியம். அப்படிப்பட்டவர்களுக்காகவே சென்னை திருமுல்லைவாயிலில் சிறப்புப் பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் மோகனப்பிரியா. இவரின் ‘மை சைல்டு’ என்ற மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சுமார் 30 குழந்தைகள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

‘2007ம் ஆண்டில் அண்ணன் மற்றும் அண்ணியுடன் இணைந்துதான் நான் இந்த சிறப்பு மையத்தை துவங்கினேன். நான் ஆரம்பித்த போது ஐந்து குழந்தைகள்தான் இங்கு பயிற்சி பெற்று வந்தார்கள். தற்போது 30 குழந்தைகளுக்கு நாங்க பயிற்சி அளித்து வருகிறோம். இங்குள்ள குழந்தைகள் அனைவரும் சிறப்புக் குழந்தைகள் என்றாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கிள் பெற்றோர் குழந்தைகளாக உள்ளனர். அதிலும் அவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

இங்கு பலதரப்பட்ட சிறப்புக் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருசிலர் மன வளர்ச்சிக் குன்றியவர்கள், மூளை முடக்குவாதத்தால் கைகால் செயல் இழந்தவர்கள், ஆட்டிசம், டவுன்சின்ட்ரோம் பாதித்த குழந்தைகளாகவும் இருக்கின்றனர். நான் படிக்கும் காலத்தில் குடிசைப் பகுதியில் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். அங்கு தான் நான் இது போன்ற சிறப்புக் குழந்தைகளை சந்தித்தேன்.

அவர்களை பார்ப்பதற்கே பரிதாபமாகவும் பாவமாகவும் இருந்தது. அவர்களை பார்த்து என்னுடைய அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. யாருடைய உதவியும் இல்லாமல் பலவித இன்னல்கள் மற்றும் கஷ்டங்களுடன் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதில் ஒரு சில குழந்தைகள் எந்தவித பராமரிப்பும் இன்றி சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். நன்றாக இருப்பவர்களே யாருடைய ஆதரவும் இல்லை என்றால் தவிப்பார்கள்.

அப்படி இருக்கும் போது இது போன்ற மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளின் நிலை நரக வேதனைதான். அப்போது முடிவு செய்தேன் என் வாழ்க்கையை இவர்களுக்காகவே அர்ப்பணிக்க வேண்டும் என்று. அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் ‘மை சைல்டு’ பயிற்சி மையம்’’ என்றவர் பயிற்சி மையத்தின் செயல்பாடு குறித்து விவரித்தார்.

‘‘ஸ்பெஷல் சைல்டு என்று அழைக்கப்படும் சிறப்பு ஏழை குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற ஒரே லட்சிய சேவை நோக்கத்துடன்தான் அதற்கான சிறப்புப்
படிப்பினை மேற்கொண்டேன். இங்கு பயிற்சி பெறும் அனைத்து குழந்தைகளும் எவருடைய துணையும் இன்றி தன்னிச்சையாக இயங்க தேவையான அனைத்து பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். கை, கால்கள் மற்றும் உடல் இயக்க பிரச்னைகள் உள்ள குழந்தைகளுக்கு பிசியோதெரபி கொடுக்கிறோம்.

ஆட்டிசம் குறைபாடு, பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஆக்குபேஷன் தெரபி மற்றும் பேச்சு பயிற்சி தருகிறோம். குழந்தைகளின் உடல் நிலை புத்துணர்ச்சியுடன் இருக்க யோகாசன பயிற்சியும் இங்குண்டு. அனைத்து குழந்தைகளும் காலை எழுந்து பல் துலக்கி, காலை கடன்களை முடித்து குளித்து, பயிற்சி மேற்கொண்டு அவர்கள் இரவு தூங்க செல்லும் வரை அதற்கான அனைத்து செயல்பாடுகளுக்கான பயிற்சி அளிப்பதால், அவர்கள் யார் உதவியும் இன்றி செயல்படுகிறார்கள். உடல் பயிற்சி ஒரு பக்கம் என்றால் ஆரோக்கிய உணவு மறுபக்கம். அவர்களுக்கான உணவினை நாங்களே சமைத்து தருகிறோம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூன்று வயது பெண் குழந்தை, ஒரு பக்க கைகால் செயல் இழந்த நிலையில் இங்கு சேர்ந்தாள். நாங்கள் தந்த சிறப்புப் பயிற்சியால் இன்று நடக்கிறாள், பேசுகிறாள். இதுவே எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதை போல் தன்னிச்சையாக எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் இருந்த 28 வயது பெண்ணும் சிறப்புப் பயிற்சிகள் மூலம் தானாகவே இயங்குவது மட்டுமில்லாமல், அவளின் அம்மாவிற்கும் உதவியாக இருக்கிறாள்.

தற்போது வாடகை இடத்தில்தான் இந்த குழந்தைகளை பராமரித்து வருகிறேன். நல்லுண்ணம் ெகாண்டவர்கள் உதவி வருகிறார்கள். என்னுடைய நோக்கம் இவர்களுக்கான பயிற்சி மையத்திற்காக சொந்தமாக இடம் அமைத்து அதில் அவர்களுக்கு தேவையான அனைத்து சிறப்பு பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் என்பது தான்’’ என்றார் மோகனப்பிரியா.

தொகுப்பு: விஜயா கண்ணன்

The post எனக்கு 30 குழந்தைகள்! appeared first on Dinakaran.

Related Stories: