சரித்திர சாதனை

பெண்ணினத்தின் வாழ்க்கை மேம்படபெருமைமிகு திட்டங்களை தீட்டியவர் கலைஞர். சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை, காவல்துறையில் பெண்களுக்கு பணி, அரசு பணிகளில் 50 சதவீதம் ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு, ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் பெண்களுக்கு ஆசிரியர் பணி என்று அவரது ஆட்சிக்கால திட்டங்கள் அனைத்தும் பெண்ணினத்தின் மேம்பாட்டிற்கான பெரும் வெளிச்சங்கள். இந்த வகையில் கலைஞரின் சமூகநீதியை மையமாகக் கொண்டு மகளிர் பொருளாதார மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தனது தலைமையிலான ஆட்சி அமைந்ததும், தேர்தல் வாக்குறுதிப்படி முதல்வர் நிறைவேற்றிய முதல் திட்டம் ‘அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணம்’. இந்த திட்டம் எளிய, நடுத்தர குடும்பத்து மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழி வகுத்துள்ளது’ என்று நாடுகள் கடந்த ஏடுகளும் பாராட்டி நிற்கிறது. இந்தவகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் செயல்பாட்டுக்கு வரப்போகிறது ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ வழங்கும் திட்டம். இதுவும் தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்புதான். ஆனால் இதை செயல்படுத்துவது சாத்தியமே இல்லை என்று கூக்குரல் போட்ட குரல்களின் எண்ணிக்கை ஏராளம். தனது திறம்பட்ட நிர்வாகத்தால் இதனை சாத்தியமாக்கி உள்ளார் முதல்வர்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல், தமிழ்நாட்டு மகளிர் கரங்களில் மாதம்தோறும் தவழப்போகிறது அவர்களுக்கான ரூ.1000 உரிமைத்தொகை. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார் முதல்வர். தமிழ்நாட்டில் இத்தகைய மாபெரும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இதை கருத்தில் கொண்டு வெற்றிகரமாக செயல்படுத்துவதில் ஆட்சியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் 2 மாதமே உள்ளதால் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு திட்டம் வெற்றி அடைய உறுதுணையாக இருக்க வேண்டும். உரிய பயனாளிகளை கண்டறிவதில் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் முதல்வர். சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மை பணியாளர்கள், இதர ஆதரவற்றோர் இத்திட்டத்தில் பயனடைவதை உறுதி செய்யவேண்டும். அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவை இல்லாவிட்டாலும் அவற்றை பெற உரிய வழிசெய்து மகளிர் உரிமைத்தொகை கிடைக்கச்செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணையோடு அறிவுறுத்தி இருப்பதும் அளப்பரியது.

திராவிட இயக்கம் தோன்றிய காலகட்டத்திலேயே பெண்களை உள்ளடக்கிய விடுதலை என்ற பெருங்கனவு இருந்தது. அந்த கனவை இலக்கு நோக்கிய திசைக்கு திருப்பியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அந்த கனவை நனவாக்கியவர் முத்தழிறிஞர் கலைஞர். இத்தகைய பெருமைமிகு அண்ணாவின் பிறந்தநாளில் தமிழ்நிலத்தில் உதிக்கிறது ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’. சாத்தியமில்லை என்ற பிம்பத்ைத உடைத்தெறிந்து முதல்வர் கொண்டு வரும் இந்த திட்டம், அவரது சரித்திர சாதனைகளில் முதலிடத்தில் இருக்கும் என்பது நிதர்சனம்.

The post சரித்திர சாதனை appeared first on Dinakaran.

Related Stories: