தலையில் காயத்துடன் சிகிச்சைக்கு வந்தபோது கூல் டிரிங்க்சில் சரக்கு கலந்து அடித்த நோயாளி: ராமநாதபுரம் மருத்துவமனையில் பரபரப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளுர், சுற்றுவட்டாரம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு பரிசோதனைகள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரமக்குடியை சேர்ந்த ராஜாக்கனி என்பவர், தலையில் காயத்துடன் அவசர பிரிவிற்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அடிப்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறி அங்குள்ள எம்.எஸ் வார்டில் உள்நோயாளியாக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளை ராஜாக்கனி சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால் இரவு நேரத்தில் படுக்கையில், மது பாட்டிலை எடுத்து குளிர்பானத்துடன் கலந்து குடித்துள்ளார். இதனை பார்த்த மற்ற நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போதை தலைக்கேறியதும் உளறியபடியே படுக்கையில் கிடந்துள்ளார். ராஜாக்கனி மது குடிப்பதை அருகிலிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

இதுகுறித்து செலிலியர்கள் அளித்த புகாரின்பேரில், மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார், ராஜாக்கனியிடம் விசாரணை நடத்தினர். போதையில் இருந்த ராஜாக்கனி யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வெளியே சென்று விட்டார்.

மேலும் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவருக்கு மது பாட்டில் எப்படி கிடைத்தது? அவரே கொண்டு வந்தாரா அல்லது வெளியில் இருந்து உறவினர் யாரேனும் வாங்கி தந்தனரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நோயாளி மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post தலையில் காயத்துடன் சிகிச்சைக்கு வந்தபோது கூல் டிரிங்க்சில் சரக்கு கலந்து அடித்த நோயாளி: ராமநாதபுரம் மருத்துவமனையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: