அரசு பெண் டாக்டர் குத்திக் கொலை கேரளாவில் அரசு டாக்டர்கள் பாதுகாப்புக்கு அவசர சட்டம்: முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் கோட்டயத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் வந்தனா தாசை பள்ளி ஆசிரியர் கத்திரிகோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போதையில் வீட்டில் தகராறு செய்தபோது காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் சிகிச்சைக்காக கொட்டாரக்கரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது பள்ளி ஆசிரியரான சந்தீப் (46) என்பவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். உடலில் 11 கத்திக் குத்துகள் விழுந்த டாக்டர் வந்தனா தாஸ் உடல் நேற்று கோட்டயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே ஆசிரியர் சந்தீப்பை போலீசார் கைது செய்து விசாரணைக்குப் பின் கொட்டாரக்கரை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று ரத்த பரிசோதனை நடத்திய பிறகு அவரை போலீசார் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே டாக்டர் வந்தனா தாஸ் கொல்லப்பட்டதை கண்டித்து அரசு டாக்டர்கள் நேற்றும் கேரளா முழுவதும் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அனைத்து டாக்டர்கள் சங்கத்தினருடன் முதல்வர் பினராயி விஜயன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார்.

* மருத்துவமனையில் மேலும் ஒருவர் ரகளை
கொட்டாரக்கரையில் போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்த பள்ளி ஆசிரியர், பெண் டாக்டரை குத்திக் கொலை செய்த நிலையில் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். போலீசார் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக நெடுங்கண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது திடீரென அவர் அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை தாக்க முயன்றார். போலீசார் அந்த நபரின் கை, கால்களை கட்டிப் போட்டனர். இதன் பின்னரே டாக்டர்கள் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

The post அரசு பெண் டாக்டர் குத்திக் கொலை கேரளாவில் அரசு டாக்டர்கள் பாதுகாப்புக்கு அவசர சட்டம்: முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: