பதவி உயர்வு கலந்தாய்வு நடக்காததால் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை: நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

சேலம்: தமிழகத்தில் இந்தாண்டு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்காததால், 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தமிழகத்தில் அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான பணியிட மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. அதே சமயம், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 670 மேல்நிலைப்பள்ளிகள், 435 உயர்நிலைப்பள்ளிகள், 1,003 நடுநிலைப்பள்ளிகள், 1,235 தொடக்கப்பள்ளிகள் என 3,343 அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. பள்ளியின் அனைத்து நிர்வாகமும், தலைமை ஆசிரியரை சார்ந்து தான் உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பொறுப்புகள் உள்ளன. முக்கியமாக பள்ளியின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும், தினந்தோறும் எமிஸில் பதிவு செய்ய வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இப்பணிகளுக்கென தனி ஊழியர்கள் இருப்பார்கள்.

தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே, இந்த பணியையும் செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், அப்பள்ளியைச் சேர்ந்த ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்படும். அவர் பெயரளவிற்கு மட்டுமே செயல்பட முடியுமே தவிர, முழு அதிகாரம் கிடைப்பது அரிது. இதனால், மாணவர் நலனும், ஆசிரியர்கள் நலனும் பாதிக்கப்படுவதுடன், நிர்வாக ரீதியில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. எனவே, இவற்றை களையும் வகையில், பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

The post பதவி உயர்வு கலந்தாய்வு நடக்காததால் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை: நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: