வெள்ளத்தில் மூழ்கிய மாட்டு கொட்டகைகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அவதி

திருப்போரூர்: திருப்போரூர் அருகே மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையினால், மாட்டு கொட்டகைகள் வெள்ளத்தில் மூழ்கியன. இதனால், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால், கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள், மாடுகள் போன்றவை போதிய உணவின்றி தவித்து வருகின்றன. பல பகுதிகளில் மாடுகள் அடைக்கப்படும் கொட்டகைகள் புயல் காற்று மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்து விட்டன. இதன் காரணமாக, மாடுகள் தங்க இடமின்றியும், உண்ண உணவின்றியும் சாலைகளில் திரிய தொடங்கி உள்ளன. மாடுகளின் உரிமையாளர்களும் கண்டு கொள்ளாததால் செங்கல்பட்டு சாலை, கூடுவாஞ்சேரி சாலை, ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் குளிருக்கு இதமாக தார் சாலைகளில் படுத்து உறங்குகின்றன. இதனால், சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு அவை கூட்டம் கூட்டமாக படுத்து உறங்குகின்றன.

குறிப்பாக, செங்கல்பட்டு சாலையில் செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம் ஆகிய இடங்களிலும், கூடுவாஞ்சேரி சாலையில் இள்ளலூர், நெல்லிக்குப்பம், கல்வாய், குமிழி ஆகிய இடங்களிலும், ஓஎம்ஆர் சாலையில் தையூர், செங்கண்மால், வாணியஞ்சாவடி, ஏகாட்டூர், நாவலூர், செம்மஞ்சேரி ஆகிய இடங்களிலும் அதிகளவில் மாடுகள் சாலைகளில் படுத்து உறங்குகின்றன. மாடுகளை வளர்ப்பவர்களும் புயல் மற்றும் மழையை காரணமாக வைத்து தங்களின் தேவைக்காக மாடுகளை பயன்படுத்தி பால் கறந்து விட்டு அவற்றை முறையாக பராமரிக்காமல் சாலைகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால், மாடுகள் சாலையிலேயே படுத்து உறங்கி, தங்களின் உணவு தேவைகளையும் தீர்த்துக் கொள்கின்றன.

மேலும், இவ்வாறு சாலைகளில் திரியும் மாடுகள் திடீரென சாலையை கடப்பதாலும், ஒன்றுடன் ஒன்று மோதி சண்டையிடுவதாலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். தற்போது, புயல் மற்றும் மழையின் காரணமாக பல்வேறு முக்கிய சாலைகளும் பள்ளம், மேடுகளுடன் காட்சி அளிக்கின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையில் இருக்கும் பள்ளங்களை தேடுவதோடு, எங்கேயாவது மாடுகள் படுத்து உறங்குகிறதா என்று பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவில் சுற்றித்திரிந்த மாடுகள் தற்போது பகலிலும் தங்களின் வாழ்விடங்களுக்கு செல்லாமல் சாலையில் சுற்றித்திரிவதால் வாகனங்களில் செல்பவர்கள் அவற்றின் மீது மோதி விபத்தை சந்திக்கின்றனர். மேலும், நடந்து செல்வோரும் மாடுகள் முட்டித்தள்ளி விடுமோ என்று ஒரு வித அச்சத்துடனே செல்கின்றனர். ஆகவே, உள்ளாட்சி நிர்வாகங்கள் பிரதான நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post வெள்ளத்தில் மூழ்கிய மாட்டு கொட்டகைகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: