திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டுப் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10ம் தேதி தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. அதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியின் தொடர்ச்சியாக, திருண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டி நேற்று நடந்தது. அதில், 720 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு, கால்பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார்.
பின்னர், கலெக்டருடன் மாணவர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதிய உணவை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராமபிரதீபன், செய்யாறு உதவி கலெக்டர் பல்லவி வர்மா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் நோய்லின் ஜான், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இந்நிலையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக, இன்று (17ம் தேதி) கல்லூரி மாணவிகளுக்கான, தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, நீச்சல், கைப்பந்து, கேரம், கிரிக்கெட், கபடி, செஸ், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து, நாளை (18ம் தேதி) அரசு ஊழியர்களுக்கான ஆண்கள் பிரிவு விளையாட்டுப் போட்டிகளும், 19ம் தேதி அரசு ஊழியர்களுக்கான பெண்கள் பிரிவு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும், வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகளும், வரும் 23ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கு கால்பந்துப் போட்டி appeared first on Dinakaran.