மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் மசாலா பொருட்கள் காலை உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி அசத்தல்

* மதிய உணவு திட்டத்துக்கும் விரிவுபடுத்த ஏற்பாடு

* கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

திருவண்ணாமலை : மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக காலை உணவு திட்டத்திற்கு மகளிர் சுய உதவி குழுவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்த மசாலா பொருட்களை மதிய உணவு திட்டத்துக்கும் விரிவுபடுத்த கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் மசாலாக்களை பயன்படுத்தி உணவுகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் காவேரி மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவிற்காக பாரம்பரிய முறையில் மசாலாப் பொருட்கள் தயாரிப்பு பணியை, கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, நம்முடைய வீடுகளுக்கு பயன்படுத்தும் தரத்தில் ரசாயன கலவை இல்லாத சுகாதார முறையில், முதன்மையான தரத்தில் மசாலா பொருட்களை தயார் செய்து காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு வழங்க வேண்டும் என மகளிர் சுய உதவி குழுவினரை கலெக்டர் கேட்டுக் கொண்டார்.அதைத்தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதல்வரின் சிறப்பான திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில், தமிழ்நாட்டிலேயே வேறு எந்த மாவட்டத்தில் இல்லாத வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்தி மசாலா பொருட்கள் தயாரித்து வழங்கப்படுகிறது.

அதன்படி, போளூர் பகுதியில் கிடைக்கும் தரமான மஞ்சள், ஜவ்வாதுமலை பகுதியில் கிடைக்கும் மிளகு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பாரம்பரியமிக்க இயற்கை முறையிலான மசாலாப் பொருட்கள் தயார்செய்யப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக, தரமானதாகவும் குறைந்த விலையிலும் காலை உணவு திட்டத்திற்கு வழங்கி வருகிறோம்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,684 பள்ளிகளில் படிக்கும் 74,158 மாணவர்களுக்கு இதுவரை 3,262 கிலோ மசாலாபொருட்கள் மாதந்தோறும் தேவையின் அடிப்படையில் காலை உணவு மையங்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகர லாபமாக முதலீடு போக ஒரு கிலோவிற்கு ₹35 வீதம் 18 ஒன்றியங்களில் உள்ள அந்தந்த வட்டாரத்தை சார்ந்த குழுக்களுக்கு மொத்தமாக 3,262 கிலோவிற்கு மாதந்தோறும் ₹1,14,170 இதுவரை நிகர லாபம் பெற்றுள்ளனர். அதன்படி ஆண்டுக்கு ₹12.55 லட்சம் பெறும் நிலை உள்ளது. அதனை முன்மாதிரியாக கொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் 2,027 பள்ளிகளில் படிக்கும் 2,05,976 மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால், முன் மதிப்பீடாக 9,062 கிலோ தேவைப்படலாம் என கணக்கிடப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்மூலம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரம் மேம்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு உண்ணும் மாணவர்களுக்கு வழங்கும் உணவின் தரத்தினை மேலும் உயர்த்தி வழங்கும் வாய்ப்பு அமையும்.

எனவே, மதிய உணவு வழங்கும் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களை பெற்று உணவு சமைக்கும் வகையில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரண்யா தேவி மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் மசாலா பொருட்கள் காலை உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: