கடலூர் : கடலூர் முதுநகரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம், சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அதை இடித்து அகற்ற வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர் துறைமுகம் இந்தியாவின் பழம்பெரும் துறைமுகங்களில் ஒன்றாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் வியாபார தலைநகரமாக கடலூர் துறைமுகம் விளங்கியது.
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சரக்கு போக்குவரத்திற்காகவும் அவர்கள் தங்கள் நாட்டுக்கு எளிதாக சென்று வரவும் கடலூர் துறைமுகத்தை பயன்படுத்தி வந்தனர். ஆசியாவில் உள்ள பழைமையான துறைமுகங்களில், கடலூர் துறைமுகமும் ஒன்று. இதனால் கடலூர் துறைமுகத்தில் ராபர்ட் கிளைவ் உள்ளிட்ட ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் அரண்மனைகளை அமைத்துக்கொண்டனர்.
இதன் நினைவாக தான் கடலூர் முதுநகரில் கிளைவ் தெரு என்று ஒரு தெருவே உள்ளது. இந்த கிளைவ் தெருவும், சோனகர் தெருவும் சந்திக்கும் இடத்தில், தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் பின்புறம் ஏற்கனவே ஒரு பிரசவ வார்டு இருந்தது. தற்போது அதை இடித்துவிட்டு புதிதாக கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினந்தோறும் கடலூர் முதுநகரிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதன் அருகிலேயே அங்கன்வாடி மையமும் உள்ளது.
மேலும் கடலூர் முதுநகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் அந்த பகுதியில் உள்ளது. அதன் மிக அருகிலேயே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1916ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று உள்ளது.
தற்போது அந்த கட்டிடம் பராமரிப்பு இன்றி மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அந்த கட்டிடம் நீதிமன்றமாக செயல்பட்டதாகவும், அதன் எதிரே தற்போது இஐடி பாரி குடோனாக செயல்பட்டு வரும் இடம், சிறைச்சாலையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் குற்றவாளிகள், தண்டனை கொடுக்கப்பட்டவுடன் எதிரே உள்ள சிறைச்சாலையில் அடைப்பதற்கு வசதியாக, ஆங்கிலேயர்கள் அங்கு சிறைச்சாலையை அமைத்துள்ளனர். தற்போது அந்த சிறைச்சாலை கட்டிடம், சர்க்கரை மூட்டைகளை அடைக்கும் குடோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படி சரித்திர புகழ் வாய்ந்த அந்த நீதிமன்ற கட்டிடம் தற்போது பராமரிப்பின்றி செடி கொடிகள் வளர்ந்து காட்சியளிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கே உடைத்து போட்டு செல்கின்றனர்.
மேலும் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அந்த கட்டிடத்தை சுற்றி முட்புதர்போல் காட்சியளிப்பதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதாகவும் தெரிகிறது.
அந்தக் கட்டிடம் கட்டி 100 ஆண்டுகளை கடந்துவிட்டது. தற்போது அது எந்தவித பயன்பாடும் இன்றி உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை இடித்து விட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான கட்டிடத்தை புதிதாக அங்கு கட்ட வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடலூர் முதுநகரில் சமூகவிரோதிகளின் கூடாரமான ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் appeared first on Dinakaran.