பெண் காவலர் தற்கொலை செய்த வழக்கில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்த காவலர் சஸ்பெண்ட்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அண்ணாநகர்: பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விசாரணைக்கு பயந்து விஷம் குடித்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகந்தி (25). இவர், கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தன் தம்பி சுப்புராயனுடன் தங்கியவாறு, சென்னை தலைமை செயலக காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த 22ம்தேதி பணி முடிந்து வீட்டிற்கு வந்த சுகந்தி சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் விஷ்ணு என்பவரை சுகந்தி காதலித்ததும், இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததால் சுகந்தியின் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு விஷ்ணு பேசாமல் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுகந்தி, தனது நண்பர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சேது (27) என்பவருடன் வீடியோ காலில் பேசி, ‘‘விஷ்ணு என் போனை எடுக்காமல் உள்ளார்.

இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’’ என்று தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. மேலும், விஷ்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுகந்தி தொடர்ந்து விஷ்ணுவிடம் வற்புறுத்தியதால் அவருடன் விஷ்ணு பேசாமல் இருந்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக விஷ்ணு, சேது ஆகியோரை கடந்த 23ம் தேதி ஆஜராகும்படி போலீசார் தெரிவித்தனர். இதனால் பயந்துபோன காவலர் விஷ்ணு, தனது வீட்டில் விஷம் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக விஷ்ணுவை உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், வழக்கு சம்பந்தமாக ஊர்க்காவல் படை வீரர் சேது கோயம்பேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது சேது கூறுகையில், ‘‘பெண் காவலர் சுகந்தி எனது நண்பர். விஷ்ணுக்கும் சுகந்திக்கும் ஏற்பட்ட தகராறில் சுகந்தி எனக்கு வீடியோ கால் பேசி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்தார். உடனடியாக சுகந்தியின் தம்பி சுப்புராயனுக்கு தகவல் தெரிவித்தேன். இதை தவிர எனக்கு வேற ஒன்றும் தெரியாது’’ என்றார்.

பின்னர் போலீசார், சேதுவிடம் விசாரணைக்கு அழைக்கும்போது உடனடியாக வரவேண்டும் என்று கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பெண் காவலர் தற்கொலை குறித்த விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். விஷ்ணுவிடம் இதுகுறித்து, விசாரணை நடத்திய பின், சுகந்தி தற்கொலைக்கான காரணம் குறித்த முழுவிவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பெண் காவலர் தற்கொலை செய்த வழக்கில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்த காவலர் சஸ்பெண்ட்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: