அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கும் 456 தனியார் கல்லூரிகள், 11 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 மண்டல கல்லூரிகள் மற்றும் 16 உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் என சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறது. பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மே 7ம் தேதி தொடங்கி, ஜூன் 6ம் தேதி வரை பெறப்பட்டது.
அதன்படி, 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 298 பேர் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி இருந்தனர். கடந்த ஆண்டை விட 40 ஆயிரத்து 645 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ரேண்டம் எண் கடந்த மே 11ம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பிஇ, பிடெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றுள்ளவர்கள் 2,41,641 பேர். அவர்களில் 2,39,299 பேர் பொதுப்பிரிவுக்கும், 2,342 பேர் தொழில் கல்வியின் கீழும் தகுதி பெற்றுள்ளனர். மொத்த விண்ணப்பங்களில் 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, மாணவ, மாணவியரின் தரவரிசைப் பட்டில் நேற்று வெளியிடப்பட்டது. இதை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக வளாகத்தில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை செயலாளர் சங்கர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா, பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் உடனிருந்தனர்.
பின்னர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தரவரிசை பட்டியலில் 144 மாணவ, மாணவியர் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று முன்னணியில் உள்ளனர். இவர்களில் 139 பேர் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். மீதமுள்ள 5 பேர் இதர வாரியங்களின் கீழ் படித்தவர்கள். 200க்கு 200 கட்ஆப் பெற்றவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியரில் கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் மாணவி தாரணி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து சென்னை அடுத்த அனகாபுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மைதிலி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இவர்கள் தவிர தனியார் பள்ளிகளில் (மெட்ரிக்குலேஷன்) படித்து காஞ்சிபுரம் சகஸ்ரா, நாமக்கல் கார்த்திகா, உதயபாளையம் அமலன் ஆண்டோ, தாராபுரம் கிருஷ்ணப்பிரியன், கடலூர் மாவட்டம் கொள்ளுக்காரன் குட்டை மாணவி தீபா, ஸ்ரீமுஷ்ணம் மாணவி ஜெ.தீபா, அம்மம்பாளையம் விஷால்ராம், திண்டுக்கல் பவித்ரா, திருப்பூர் சுபாஸ்ரீ, கோதை காமாட்சி ஆகியோர் 200க்கு 200 கட்ஆப் பெற்றுள்ளனர்.
இந்த தரவரிசைப்பட்டியல் எண்களை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணைய தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பிஇ, பிடெக் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் தங்கள் பெயர்கள் தரவரிசைப் பட்டியலில் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ இன்று முதல் 5 நாட்களுக்குள் தங்களுக்கு அருகில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தில் அணுகி குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்தின் கீழ் சேர்க்கை வேண்டும் என்று கேட்காமல் விடுபட்ட மாணவர்களும் மேற்கண்ட சேவை மையங்களின் மூலம் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவியரின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதுவரையில் அழைப்பு மையங்களை தொடர்பு கொண்டு 28,559 பேர் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளனர். மின்னஞ்சல் மூலம் 8037 பேரும், நேரடியாக 1564 பேரும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளனர். கல்வி கட்டணத்தை பொறுத்தவரையில் இந்த வருடம் எந்த மாற்றமும் இல்லை. பழைய கட்டண நடைமுறையே தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கடலூர் மாணவி தாரணி முதலிடம்: பொது கலந்தாய்வு ஜூலை 14ல் தொடக்கம் appeared first on Dinakaran.
