பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 3வது நாளாக போராட்டம்

வடலூர்: பணி நிரந்தரம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 3வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் எல்.எல்.சி இந்திய நிறுவனம் உள்ளது. இங்கு சுரங்கம் 1, சுரங்கம் ஒன்று விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியக்கூடிய சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பிரதமர் அறிவித்த ரோஸ்கர் மேளா திட்டத்தின் படி பணி நிரந்தரம் செய்ய கோரியும், நிரந்தரபடுத்தும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் 50 ஆயிரம் வழங்க கோரியும், என்எல்சிக்கு ஏற்கனவே வீடு, நிலம் கொடுத்து உழைத்துக்கொண்டிருக்க கூடிய சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் இரவில் இருந்து வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று என்எல்சி தலைமை அலுவலகத்தை காலையிலிருந்து இரவு வரை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று மூன்றாவது நாளாக காலை சுரங்கம் 1, சுரங்கம் ஒன்று விரிவாக்கம், சுரங்கம் இரண்டு, அனல் மின் நிலையம் ஒன்று விரிவாக்கம், அனல் மின் நிலையம் 2 , அனல் மின் நிலையம் 2 விரிவாக்கம் என ஆறு இடத்தில் தொழிலாளர்கள் மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 3வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: