தேர்தல் ஆணையர்கள் நியமன குழு சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன குழு ஆகியவை தொடர்பான சட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒன்றிய அரசின் அரசாணை மற்றும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர் நாராயணன் உட்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்குகளை முன்னதாக உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு வாரம் விசாரணை நடத்தி பிறப்பித்த உத்தரவில், ‘இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை இனிமேல் பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் அடங்கிய கொண்ட குழு தான் நியமனம் செய்யும்’ என்று கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து உச்ச நீதிமன்றத்தினை விலக்கி வைக்கும் வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒருவர் தேர்வுக் குழுவில் இடம்பெறுவதற்கு ஏற்ப ஒன்றிய அரசு சட்டம் இயற்றி அரசாணை பிறப்பித்துள்ளது.

அதற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன குழு தொடர்பான சட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்ட ஒன்றிய அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படையான சுதந்திரமான குழு அமைக்கப்பட்ட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் விவகாரத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் மற்றும் அதுசார்ந்த அரசாணை ஆகியவை இந்திய அரசியலமைப்பு அதிகாரத்தை முழுவதுமாக மீறும் செயலாகும். எனவே உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்தார். இதையடுத்து இந்த சட்டம் தொடர்பான நகல் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டதா? என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர். மேலும் இதுகுறித்த நிலைப்பாட்டை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post தேர்தல் ஆணையர்கள் நியமன குழு சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: