ராமேஸ்வரம்: பாரத தேசத்தில் சிறந்தது தமிழ் மொழி என்று ராமேஸ்வரம் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி பேசினார். ராமேஸ்வரத்தில் நேற்று நடந்த காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி தர்மர், மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் பேராசிரியர் காமகோடி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘என் உயிரினும் மேலான தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். தேசம் ஒரு கண் என்றால், மற்றொரு கண் தமிழ். அப்துல் கலாமை தந்த சிவமயமான ராமேஸ்வரம் புண்ணிய பூமியில் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா நடைபெறுவது மிகவும் பெருமை. இந்த காசி தமிழ் சங்கத்தின் மூலம் எண்ணற்றோர் தமிழை கற்க வேண்டும் என முன்வந்துள்ளனர். தமிழ் கலாச்சாரம் உயர்வானது. பாரத தேசத்தில் சிறந்தது தமிழ் மொழி. உயிரே போகினும் உலகின் உன்னத நிலைக்கு பாரதம் வரவேண்டும். அப்போது பாரத தேசத்தின் உச்சத்தை தமிழகம் தொடவேண்டும். வளமான தமிழகம் வலுவான பாரதம். எந்த தீயசக்தியும் இதை ஒன்றும் செய்ய முடியாது. நாட்டின் தன்மானத்திற்கு இழுக்கு வரும்போது அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்’’ என முழுவதும் தமிழில் பேசினார்.
* ‘இந்தி மாணவர்கள் தமிழ் கற்க ஆர்வம்’
காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘காசி – ராமேஸ்வரம் இணைப்பு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதுபோன்ற நிகழ்வுகளால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் கற்கிறார்கள். இந்தி பேசும் மாணவர்கள் கூட தமிழ் கற்கிறார்கள். தமிழ் மொழி மிகவும் பழமையானது அதை விடவும், மிகவும் சக்தி வாய்ந்த அழகான மொழி என நம் எல்லோருக்கும் தெரியும். தமிழ் மொழிக்கு நம் பிரதமரை போல வேறு யாரும் புகழ் சேர்த்ததில்லை. நம்மோடு இருக்கும் துணை ஜனாதிபதி நம்மில் ஒருவர். தமிழ் மக்களின் இதய துடிப்பை நன்கு உணர்ந்தவர். நம் முன்னேற்றத்திற்காக இரவும் பகலும் உழைக்கிறார். உங்கள் அனைவருக்கும் வணக்கம் நன்றி’’ என முழுவதும் தமிழில் பேசி ஆளுநர் தனது பேச்சை நிறைவு செய்தார்.
