துவாரகா சாலை செலவு 1,278 சதவீதம் அதிகரிப்பு; ரூ528 கோடி திட்ட மதிப்பீடு ரூ7238 கோடியானது எப்படி?.. காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி

புதுடெல்லி: மோடி அரசின் ஊழல் வெளியாகி அம்பலமாகி உள்ளது. துவாரகா விரைவுச்சாலை திட்ட மதிப்பீடு ரூ528 கோடியில் இருந்து ரூ7238 கோடியாக மாறியது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில் இருந்து அரியானா மாநிலம் குருகிராமிற்கு செல்லும் துவாரகா விரைவுச்சாலை 29 கிமீ பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ528.80 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் ரூ7238.20 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் ரூ6700 கோடி முறைகேடு நடந்து இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழல் அரசு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.

இதுபற்றி அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: உள்கட்டமைப்பு திட்டங்களில் மோடி அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது. அது தேசத்தை நரகத்திற்கு அழைத்துச் செல்கிறது. ‘பாரத்மாலா பரியோஜனா’ நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை இதை சுட்டிக்காட்டுகிறது. பிரதமர் மோடி தனது அரசியல் எதிரிகளின் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன்பு தனது ஆட்சியில் நடக்கும் ஊழலையும் அவர் பார்க்க வேண்டும். பாஜ ஆட்சியின் ஊழலும், கொள்ளையும் தேசத்தை நரகத்திற்கு அழைத்துச் செல்கிறது.பாரத்மாலா பரியோஜனா டெண்டர் ஏல செயல்முறையின் தெளிவான மீறல் மற்றும் பெரும் நிதி முறைகேடு ஆகியவற்றை சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது. இந்த திட்டத்தில் மோசடி நடந்துள்ளது என்பதற்கு அப்பட்டமான உதாரணங்களில் ஒன்று துவாரகா விரைவுச்சாலை.

இந்த திட்டத்திற்கான செலவு முதலில் ரூ 528.8 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஆனால் பின்னர் ரூ 7,287.2 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இது 1,278 சதவீதம் அதிகரிப்பு என்று சிஏஜி அம்பலப்படுத்தி உள்ளது. துவாரகா விரைவுச்சாலை எந்த ஒரு விரிவான திட்ட அறிக்கையும் இல்லாமல் மதிப்பிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட சுங்கச்சாவடிகள் திட்டத்தின் மூலதனச் செலவை மீட்டெடுப்பதில் இடையூறு விளைவிக்கும். மேலும் பயணிகளுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும். பிரதமரே, உங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிரான ஊழலைப் பற்றி நீங்கள் பேசும் முன், நீங்கள் உங்கள் ஆட்சியை ஒருமுறை பார்க்க வேண்டும். ஏனென்றால் அதை நீங்களே மேற்பார்வையிடுகிறீர்கள். 2024ல், இந்தியா உங்கள் அரசை இதற்கெல்லாம் பொறுப்பேற்கச் செய்யும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

The post துவாரகா சாலை செலவு 1,278 சதவீதம் அதிகரிப்பு; ரூ528 கோடி திட்ட மதிப்பீடு ரூ7238 கோடியானது எப்படி?.. காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: