மாவட்டத்துக்கு ரூ.25 லட்சம் அதிமுக மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு: தொண்டர்களை திரட்டவும், வாகனங்களுக்கும், மதுவுக்கும் பணத்தை தண்ணீராக இறைத்தனர்

சென்னை: அதிமுக மாநாட்டுக்கு ரூ.100 கோடி வரை செலவானதாக கூறப்படுகிறது. தொண்டர்களை திரட்டவும், வாகனங்களுக்கும், சாராயத்திற்கும் பணத்தை தண்ணீராக இறைத்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகிகளுக்கு 25 லட்சம் ரூபாய் தலைமைக்கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக உடைந்த பிறகு தனது செல்வாக்கை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் போட்டிப்போட்டு வருகின்றனர். அதில் கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்ற பிறகு, அதை தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறு வகைகளிலும் முயன்று வருகிறார். அவர் திட்டப்படி பாஜவும் அவரை அங்கீகரித்து விட்டது. இதனால் தேர்தலுக்கு முன்னதாக தனது செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டு மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரமாண்ட மாநாடு நடைபெறும் என்று அறிவித்தார்.

இதற்காக 2 மாதமாக அவர் கட்சியின் முன்னணி தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தினார். மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை நடத்தினார். முதலில் சுணக்கமாக இருந்த கட்சி நிர்வாகிகள், கையில் இருந்த பணத்தை எடுக்காமல் இருந்தனர். இதனால் கட்சித் தலைமையே, கட்சியில் உள்ள ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் ஆட்களை திரட்டுவதற்கு மட்டுமே குறைந்தது 50 லட்சம் செலவு செய்ய வேண்டும். அதில் பாதியை அதாவது ரூ.25 லட்சத்தை கட்சித் தலைமை தரும் என்று கூறி பணத்தை கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின்னர் மளமளவென வேலைகள் நடந்தன.

கட்சித் தலைமை சார்பில் அதிமுகவின் 74 மாவட்டச் செயலாளர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கட்சியினரையும், பொதுமக்களையும் திரட்டத் தொடங்கினர். வாகனங்களை புக் செய்தனர். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.200, சாப்பாடு, ஆண்கள் என்றால் ஒரு குவாட்டர், பெண் என்றால் புடவை வழங்கப்படும். குடும்பத்தோடு வந்தால், சாப்பாடு தங்கும் இடம் தவிர ஒரு நாளைக்கு ரூ.500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஆட்களை திரட்டினர். கட்சியில் இருந்து பணம் வந்த பிறகு சுவர் விளம்பரம், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன.

தமிழகத்தில் வழக்கமாக எதிர்க்கட்சிகள் மாநாடு நடத்தினால் ஆளும் கட்சியின் சார்பில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். ஆர்டிஓக்கள் மூலமாக வாகன உரிமையாளர்கள் மிரட்டப்படுவார்கள். ஆனால் திமுக அரசு, அதிமுக மாநாட்டுக்கு எந்தவித இடையூறும் செய்யவில்லை. இதை தவிர மாவட்டச் செயலாளர்கள், உள்ளூர் கடைகள், தொழிலதிபர்கள் என பலரிடமும் வசூல் வேட்டையில் இறங்கினர். பின்னர் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்களும் பணத்தை செலவு செய்யும்படி கட்சித் தலைமை உத்தரவிட்டது. அவர்களும் அதன்பின்னரே பணத்தை எடுக்க ஆரம்பித்தனர்.

இதை தவிர மாநாட்டுக்கு உணவை தயாரிக்கும் சமையல்காரர்கள் மற்றும் பாத்திர வாடகைக்கு ரூ.50 லட்சம், நடிகர்களின் கலைநிகழ்ச்சி, பந்தலில் போடப்பட்ட ஒன்றரை லட்சம் நாற்காலிகள், கல்யாண மண்டபம் என சகல செலவுகளும் சேர்த்து இந்த மாநாட்டுக்காக ரூ.100 கோடிக்கு மேல் கட்சித் தலைமை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தனது பலத்தை நிரூபிக்க எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக ரூ.100 கோடி வரை செலவு செய்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதற்கிடையே, அதிமுக மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முற்றுகையிட்டதால் கடந்த 2 நாட்களில் ரூ.60 கோடி வரை மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The post மாவட்டத்துக்கு ரூ.25 லட்சம் அதிமுக மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு: தொண்டர்களை திரட்டவும், வாகனங்களுக்கும், மதுவுக்கும் பணத்தை தண்ணீராக இறைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: