மனித உயிரிழப்பு, பொதுச்சொத்து சேதமாவதை தடுக்க பேரிடர் காலத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: ‘‘பேரிடர்களின்போது மனித உயிரிழப்பு மற்றும் பொதுச்சொத்து சேதங்களை தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, தலைமைச்செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், சிறப்பாகத் திட்டமிட்டு, இந்தாண்டும் எதிர்வரும் பருவமழை காலத்தை அதேபோன்ற முறையை கையாளவேண்டும். பேரிடர் மேலாண்மையின் அனைத்து அம்சங்களான நிறுவன மற்றும் நிதி ஏற்பாடுகள், பேரிடர் தவிர்ப்பு, தணிப்பு, ஆயத்தம், மீட்பு, நிவாரணம், சீரமைப்பு, மறுவாழ்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கையை அரசு மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை இயக்கத்தில் முக்கியமான மூன்று கொள்கைகளை நாம் பின்பற்றி வருகிறோம்.

* அனைத்து வகை பேரிடர்களின் எதிர்மறையான விளைவுகளை குறைத்தல்.

* உயிரிழப்பு, பொதுச் சொத்துகள் மற்றும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகளின் சேதம் ஆகியவற்றைத் தவிர்த்தல்

* அரசு உருவாக்கிய பொருளாதார மற்றும் வளர்ச்சி ஆதாயங்களை இழக்காமல் இருத்தல்.இவைதான் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கைகளின் சுருக்கம்.

* சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வள ஆதாரத் துறை ஆகிய துறைகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ.716 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசரகால கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

* பொதுமக்களைப் தங்க வைக்க நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* மழைக்காலங்களில் முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* பள்ளிகளில் மாணவர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

* சென்னை, புறநகர் பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அமைச்சர்களுக்கும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறேன். இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன்.

அதனடிப்படையில், இனி சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவமழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

The post மனித உயிரிழப்பு, பொதுச்சொத்து சேதமாவதை தடுக்க பேரிடர் காலத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: