பாகிஸ்தானில் மதராசி இந்து சமூகம் நிர்வகித்தது 150 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் இடிப்பு

கராச்சி: பாகிஸ்தானில் மதராசி இந்து சமூகத்தினரால் நிர்வகித்து வரப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் கராச்சியில் சிப்பாய் பஜாரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இதனை மதராசி இந்து சமூகத்தினர் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அங்கு வந்த அரசு அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலின் காம்பவுண்டு சுவர் மற்றும் கேட்டை மட்டும் விட்டு விட்டு, கோயிலின் முழுப் பகுதியையும் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர். இது அப்பகுதி இந்து சமூகத்தினர் மத்தியில் கடும் வேதனை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அப்பகுதியில் உள்ள  பஞ்சமுகி அனுமன் கோயில் நிர்வாகி ராம்நாத் மிஸ்ரா மகாராஜ் கூறுகையில், ‘’கடந்த சில ஆண்டுகளாகவே இந்த 500 சதுர யார்டு இடத்தை ரியல் எஸ்டேட்காரர்கள் மற்றும் நிலத்தை அபகரிப்பவர்கள் குறிவைத்து கொண்டிருந்தனர்.

இந்த கோயில் மிகவும் பழமையானது மற்றும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மதராசி இந்து சமூகமும் ஒப்புக் கொண்டது. இதையே காரணமாக அரசு அதிகாரிகள் சுட்டிக் காட்டியதாக போலீசார் தெரிவித்தனர். இதனை இடிப்பது குறித்து எந்த வித முன் தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை,’’ என்று வருத்தப்பட்டார். மற்றொரு கோயில் மீது ஏவுகணை தாக்குதல்
தெற்கு சிந்து மாகாணத்தின் காஷ்மோர் பகுதியில் பாக்ரி சமூகத்தினரால் நிர்வகிக்கப்படும் இந்து கோயில் உள்ளது. இது ஆண்டுக்கொரு முறை திருவிழாவின் போது மட்டுமே திறக்கப்படும். இந்நிலையில், இந்த கோயில் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து பாக்ரி சமூகத்தை சேர்ந்த டாக்டர் ரமேஷ் கூறிய போது, ‘’சம்பவ இடத்துக்கு போலீஸ் வந்ததும் கண்மூடித்தனமாக ஏவுகணை தாக்குதல் நடத்திய 8 பேரும் தப்பியோடி விட்டனர். இதனால் அவர்களது கொள்ளை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் எங்கள் சமூகத்தின் அச்சத்தில் இருக்கின்றனர். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,’’ என்று கூறினார்.

The post பாகிஸ்தானில் மதராசி இந்து சமூகம் நிர்வகித்தது 150 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் இடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: