அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரம் அண்ணாமலை மீது சிவில், கிரிமினல் நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்

சென்னை: பொய்யான அவதூறுகளை வெளியிட்டதை நீக்கவில்லை என்றால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலைக்கு திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில், வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சன் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது: உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக இளைஞரணி செயலாளராகவும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட அமலாக்கம், ஏழ்மை ஒழிப்பு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 14ம் தேதி தாங்கள் பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேட்டி கொடுத்தது தொலைக்காட்சிகளிலும் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஒரு தனி இன்டர்நெட் பக்கத்தை தொடங்கி அதிலும் ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ளீர்கள். அந்த வீடியோவில் எனது கட்சிக்காரரான உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.2,039 கோடி என்று தெரிவித்துள்ளீர்கள். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினரையும் (மைனர் குழந்தை உள்பட) அதில் இழுத்துள்ளீர்கள். உதயநிதி ஸ்டாலின் குழந்தைகள் திமுகவின் பிரதிநிதிகளோ அல்லது உறுப்பினர்களோ இல்லை. இதன் மூலம் நீங்கள் குழந்தைகளின் தனி உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளீர்கள். இதன் மூலம் உங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

மைனர் குழந்தைகளின் தனி உரிமையை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்துள்ள அரசியலமைப்பு பிரிவை இந்திய அரசு கடந்த 1992 டிசம்பர் 11ம் தேதி அங்கீகரித்துள்ளது. குழந்தைகள் உரிமை சட்டம் 2005ன்கீழ் உங்கள் மீது எனது கட்சிக்காரரான உதயநிதி ஸ்டாலின் குற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளார். எனது கட்சிக்காரர் கடந்த 2021 தேர்தலின்போது தனது சொத்து விபரங்களை வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அதில் தனது சொத்து ரூ.29 கோடி என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரது பட தயாரிப்பு நிறுவனமான ரெட்ஜெயண்டின் சொத்து மதிப்பு ரூ.2010 கோடி என்று நீங்களே கணக்கிட்டு உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.2,039 கோடி என்று ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளீர்கள்.

எனது கட்சிக்காரரின் சொத்து மற்றும் செலவினங்கள் தொடர்பாக வேட்புமனுவில் அவர் தெரிவித்தது பொது வெளியில் மக்கள் பார்க்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் எந்த ஆதாரமும் இல்லாமல் அவரது சொத்து மதிப்பு ரூ.2.039 என்று தெரிவித்திருப்பது எனது கட்சிகாரருக்கு பொது மக்கள் மத்தியில் உள்ள நற்பெயரை கெடுக்கும் உள்நோக்கம் கொண்ட செயலாகும். எனது கட்சிக்காரர் ஏற்கனவே ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பங்குதாரர் பதவியிலிருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் அந் நிறுவனத்தை தொடர்பு படுத்துவதில் உள்நோக்கம் உள்ளது.

மேலும், அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2010 கோடி என்று கற்பனையான ஒரு விஷயத்தை தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது. எனது கட்சிக்காரர் பங்குதாரராக இருந்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.30 கோடிதான். இந்த நிலையில் கற்பனையாக ஒரு தொகையை உருவாக்கி அதை எனது கட்சிக்காரரின் சொத்து என்று தெரிவித்திருப்பது எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்து செயலாகும். ‘திமுக பைல்ஸ்’ என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளீர்கள். அதுவும் பொய்யான தகவல்களுடன் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக ரெட்ஜெயண்ட் நிறுவனம் திரைத்துறையில் செயல்பட்டு வருகிறது. எனது கட்சிக்காரர் பங்குதாரராக இருந்த காலத்தில், அதிமுக ஆட்சிக காலத்தில்கூட அந்த நிறுவனம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிகளை பெற்றது. அடுத்ததாக நோபல் ஸ்டீல் என்ற நிறுவனத்தின் இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் என்று ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளீர்கள். இது அப்பட்டமான கற்பனை. அவர் இந்த நிறுவனத்தின் இயக்குநரே அல்ல. மேலும், நோபல் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் என்றும் தாங்கள் தெரிவித்துள்ளீர்கள்.

இரண்டு நிறுவனங்களையும் பிரித்து பார்க்க தெரியாமல் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான நீங்கள் இருப்பதை பார்க்கும்போது உங்களின் திறமையின்மை வெளியாகியுள்ளது. ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறுவதற்கு முன்பு பண மோசடி குறித்து புரிந்துகொண்டிருக்க வேண்டும். சட்டவிரோத பணம் வைத்திருந்தால் பண மோசடி சட்டத்தின்கீழ் குற்றமாகும். எனது கட்சிக்காரர் தாங்கள் குறிப்பிடும் நிறுவனத்திற்கு சம்மந்தமில்லாத நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றபோது துபாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக கூறியிருப்பது அவதூறாகும்.

உங்களது குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாத கற்பனையான குற்றச்சாட்டுகள். எதையும் ஆய்வு செய்யாமல் எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியுள்ளீர்கள். ஒரு தனி மனிதனின் நடத்தை மீது ஆதாரமில்லாமல் பொது வௌியில் மக்கள் மத்தியில் தாக்குதல் நடத்துவது குற்றமாகும். இதன் மூலம் பொது வாழ்வில் அவருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளீர்கள். எனவே, எனது கட்சிக்காரர் மீது ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவுகள், வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும்.

எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அவருக்கு ரூ. 50 கோடி இழப்பீடு தரவேண்டும். அந்த தொகையை தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் தங்கள் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவுகள், வீடியோக்களை நீக்க வேண்டும். எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அவருக்கு ரூ.50 கோடி இழப்பீடு தரவேண்டும்.

The post அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரம் அண்ணாமலை மீது சிவில், கிரிமினல் நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: