குற்றவாளி செய்த தண்டனைக்கு… இது சரியான தீர்ப்பாக நான் பார்க்க முடியவில்லை: ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி

சென்னை: குற்றவாளி செய்த தண்டனைக்கு இது சரியான தீர்ப்பாக நான் பாக்க முடியவில்லை. எனவே தமிழக அரசு மேல்முறையீடு செய்து 10 ஆண்டுகள் வரை தண்டனையை பெற்று தர வேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கோரிக்கை விடுத்துள்ளார். பெண் எஸ்பியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி பேசியதாவது:

சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து, வக்கீல்களின் திறமையான வாதங்களால் முழுமையாக தப்பித்துவிடலாம் என்று நோக்கத்தில் செயல்படுத்த விடாமல் ஒரு தண்டனை கிடைத்து இருக்கிறது என்பது ஒரு சமாதான நிகழ்வாக இருக்கிறது. ஆனால் ஒரு காவல் துறை அதிகாரியாக இருக்க கூடிய பெண்ணுக்கு, நடுத்தெருவில் இது நடந்து இருக்கிறது என்று பார்க்கிற போது, பெண்களுக்கு எதிரான குற்றம், பெண்களை மானபங்கம் படுத்துவது, பெண்களை பாலியல் சீண்டலுக்கு, பாலியல் குற்றங்களுக்கு ஆட்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் இதை காட்டிலும் மிக கடுமையான தண்டனை தான் சட்டம் எதிர்பார்க்கிறது.

அந்த அளவுக்கு தண்டனையை தரவில்லை. அது ஏன் என்று தான் எனக்கு தெரியவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடும் தமிழக அரசு செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஏன் என்றால் இது மிகவும் இலகுவான ஒரு தீர்ப்பு என்று தான் எனக்கு தோன்றுகிறது. குற்றவாளி இழைத்த குற்றத்திற்கு, அந்த குற்றத்தினுடைய கன பரிமானத்திற்கு ஏற்ற ஒரு தீர்ப்பாக என்னால் இதை பார்க்க முடியவில்லை.இன்னொரு புறம் இதை பார்த்தால், கண்ணனுக்கு ரூ.500 அபராதம் என்று விதிக்கப்பட்டுள்ளது. கண்ணனை பொருத்த அளவில் அவரது மேல் அதிகாரி சொன்னதை கீழ்படிந்து செயல்படுத்த வேண்டிய ஒரு அதிகாரி என்ற முறையில், காவல்துறையினுடையே பணியை செய்துள்ளார். அவருக்கு ஏன் ரூ.500 அபராதம் என்று எனக்கு விளங்கவில்லை. இதுக்கு ஏன் இவ்வளவு இலேசான தண்டனை ஏன் என்று எனக்கு தெரியவில்லை. தண்டனை கிடைத்து இருக்கிறது என்ற சிறு சமாதானம் அவ்வளவு தான்.

மேல்முறையீடு செல்லும் போது, மேலே இருக்கக்கூடிய நீதிபதிகள், இந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான பிரிவுகளை கணக்கில் எடுத்து கொண்டால் இது கடுமையான தண்டனையாக மாறக்கூடும். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பல லட்சம் ரூபாய் அபராதமும் என்று கூட தண்டனைகள் மாறக்கூடும். அப்படி நடந்ததால் தான் சரியான தண்டனையாக இருக்கும். அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் இருக்க கூடிய இந்த மாதரியான செயல்பாடுகளை யாரும் ஈடுபட்டால் யாரையும் சும்மா விடமாட்டார்கள் என்று ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். அதுக்காக வேண்டியாவது, இந்த அரசு வந்து மேல் முறையீடு செய்து, நம்மிடம் நல்ல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அதனால் நன்றாக வாதாடி சரியாக தண்டனையாக பெற்று தருவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி பேசினார்.

The post குற்றவாளி செய்த தண்டனைக்கு… இது சரியான தீர்ப்பாக நான் பார்க்க முடியவில்லை: ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி appeared first on Dinakaran.

Related Stories: