சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!!

சென்னை: மூட நம்பிக்கை பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மகா விஷ்ணுவுக்கு ஒருமாதம் கழித்து ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் பொது தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்வில், திருப்பூரைச் சேர்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர், அறிவியலுக்கு சம்பந்தமில்லாத மூடநம்பிக்கைகளை விதைக்கும் விதமாக கடந்த ஜென்மம், பாவ புண்ணியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இவர் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார். தனது பேச்சு திரிக்கப்பட்டதாகவும் முழு உரையைக் கேட்காமல் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் மகா விஷ்ணு மனுவில் கூறியிருந்தார்.

மேலும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இந்த மனு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகா விஷ்ணுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

The post சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: