பெரம்பூர் நவராத்திரி கோயிலில் 4,000 பொம்மைகளுடன் கொலு

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் ஜிகேஎம்.காலனி 36வது தெருவில் உள்ள நவராத்திரி கோயிலில் நவராத்திரி கொலு கண்காட்சி இன்று காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் ஒரே கருவறையில் இருப்பதுபோன்று வடிவமைத்துள்ளனர். மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் கடவுள்களில் உருவங்கள் மற்றும் தமிழர்களின் கலாச்சாரம், ஆன்மீகத்தின் மகத்துவம் ஆகியவற்றை பறைசாற்றும் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சரவணப் பொய்கை முருகன் நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில் கார்த்திகை பெண்கள் சுற்றி இருப்பது போலவும் சிவன் நெற்றியில் இருந்து தண்ணீர் வருவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருப்பாற்கடல் கடைந்து வாசுகி பாம்பை கயிறாக்கி மேரு மலையை மத்தாக்கி ஒரு பக்கம் அசுரர்கள் இருப்பது போலவும் மறு பக்கம் தேவர்கள் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் பிறந்தவுடன் வசுதேவர் சிறைச்சாலையில் இருந்து நந்தன் வீட்டிற்கு குழந்தையை மாற்றி வைக்க ஆற்றில் செல்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.‘’நவராத்திரியின்போது இதுபோன்ற கொலு கண்காட்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துவந்து நமது முந்தைய கலாச்சாரம், ஆன்மீகம் குறித்த நிகழ்வுகள், வரலாற்று சுவடுகளை வருங்கால சந்ததியினருக்கு பெற்றோர்கள் கற்றுத்தரவேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் இதுபோன்ற கொலு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்’’ என்று கொலு கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்திவரும் கஜேந்திரன் தெரிவித்தார்.

 

The post பெரம்பூர் நவராத்திரி கோயிலில் 4,000 பொம்மைகளுடன் கொலு appeared first on Dinakaran.

Related Stories: