மெரினாவில் போர் விமான சாகச நிகழ்ச்சி… விமானப்படை மூலம் பொதுமக்களுக்கு தொப்பி : அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் அக்.6-ல் நடைபெற உள்ள விமான சாகச ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை ஒட்டி, மெரினாவில் 6ம் தேதி போர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவர். 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெரினாவில் நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை காண 15 லட்சம் மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், விமானப்படை உயர் அதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பார்வையிட உள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவற்றை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு, “15 லட்சம் பேர் திரள உள்ளதால் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் 20 தீயணைப்பு வண்டிகள், 20 ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்கும்.ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விமானப்படை மூலம் பொதுமக்களுக்கு தொப்பி வழங்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மெரினாவில் போர் விமான சாகச நிகழ்ச்சி… விமானப்படை மூலம் பொதுமக்களுக்கு தொப்பி : அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: