பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற விவகாரம் தவறு செய்த காவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: புகார் வந்த அன்றே 4 பேர் சஸ்பெண்ட்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதிக்கு சுற்றுலா வந்த இளம் பெண்ணுக்கு 4 காவலர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: இதைத்தொடர்ந்து முக்கொம்பு சம்பவத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 4ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் சரகம், முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணிபுரிந்து வரும் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் அனுமதியோ, விடுப்போ பெறவில்லை.

பல நாட்களாக பணிக்கு வராமல் இருந்த காவலர் சித்தார்த்தன் என்பவருடன் இணைந்து சுற்றுலா தலத்திற்கு வருகை தந்திருந்த இளைஞர் மற்றும் 17 வயது பெண்ணை மிரட்டி, அந்த இளைஞரை தாக்கி விரட்டி அனுப்பிவிட்டு, உடனிருந்த பெண்ணை அந்த காவலர்கள் தாங்கள் வந்திருந்த தனியார் காரில் ஏற்றி, அவரிடம் தவறான முறையில் நடந்திருக்கிறார்கள். இதனையடுத்து அந்த பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர் இருவரும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

அதன்பேரில், அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, அந்த காவலர்களை விசாரித்தபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இங்கே எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறபோது, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார். அது உண்மையல்ல. அந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், அந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் உடனடியாக எஸ்.பி.யை தொடர்பு கொண்டு, அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக உதவி ஆய்வாளர் மற்றும் 3காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் அன்றே கைது செய்யப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

The post பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற விவகாரம் தவறு செய்த காவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: புகார் வந்த அன்றே 4 பேர் சஸ்பெண்ட்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: