சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம்: புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். முதல்வருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கிறார்கள்.
முதலில் சிங்கப்பூருக்கு செல்லும் முதல்வர் அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்ெவஸ்மன்ட் அதிபர்கள் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர்களை சந்திக்க உள்ளார். இதனையடுத்து மாலை நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டிஎன், டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலைநிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்துகொள்கிறார்.

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது. ஜப்பான் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய நிசான் நிறுவனம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சமீபத்தில் ரூ.3,300 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்தது. இந்த உறவை மேலும் மேம்படுத்தும் வகையில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி ஜப்பான் செல்கிறார். அங்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க இருக்கிறார். மேலும், ஜப்பான் நாட்டில், ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. அதில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட உள்ளன. இதுவரை ஜப்பான் சென்றுள்ள அரசுக் குழுக்கள் டோக்கியோ மட்டுமே சென்று வந்துள்ளன. ஆனால், ஒசாகாவில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு பல முன்னணி தொழில் நிறுவனங்களும் அமைந்துள்ளன. எனவே, ஒசாகா நகருக்கும் வருகை தரும்படி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முதல்முறையாக ஒசாகா நகருக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு செல்ல உள்ளது.

அதன்படி, ஒசாகாவில், ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்துகொள்ள உள்ளார். மேலும் முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார். அதேபோல, டோக்கியோ நகரில் அந்நாட்டின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிஷூமுரா யசுதோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோவை முதல்வர் சந்திக்க உள்ளார். மேலும், 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்கள். கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட உள்ளன. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மேம்பட்ட தொழில் மையத்தை பார்வையிட உள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், ஜப்பானுக்கும் இடையே நீண்ட நெடிய வரலாற்று உறவு இருந்து வருகிறது. இந்த உறவு மேலும் வலுவடையும் வகையில், இந்த அரசு முறைப் பயணம் அமைந்திடும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 11.26 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார். அவருடன், தலைமைச்செயலாளர் இறையன்பு, முதல்வரின் முதன்மை செயலாளர் முருகானந்தம், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் செல்கின்றனர்.

The post சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம்: புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: