கணவர் வீட்டாரின் பழிப்பேச்சுக்கு அஞ்சி 25 நாள் பச்சிளங் குழந்தையை குளத்தில் வீசிய தாய் கைது: மறுவாழ்வு அளித்த இளைஞருக்கு பாராட்டு

திகம்கர்: கணவர் வீட்டாரின் பழிப்பேச்சுக்கு அஞ்சி 25 நாள் பச்சிளம் குழந்தையை குளத்தில் வீசிய தாய் கைது செய்யப்பட்ட நிலையில், குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலா லோதி என்பவருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமாகி வெறும் 6 மாதங்களிலேயே அவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதனால், கணவர் வீட்டாரின் பழிச்சொற்களுக்கும், கேலிப் பேச்சுகளுக்கும் ஆளானதாகக் கூறப்படுகிறது.

இந்த அவமானத்தால் மனமுடைந்த அவர், தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு, தன்னுடைய இந்தச் சிக்கலுக்குக் காரணம் குழந்தைதான் என்று கருதி, தனது தாயுடன் சேர்ந்து அந்தப் பச்சிளம் குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்துள்ளார். அதன்படி, 25 நாட்களேயான அந்தப் பச்சிளம் குழந்தையை திகம்கரில் உள்ள ஒரு குளத்தில் வீசி எறிந்துவிட்டு இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது, அதைப் பார்த்துவிட்ட லலன் ரைக்வார் என்ற இளைஞர், உடனடியாக குளத்தில் குதித்து, நீரில் மூழ்கிக்கொண்டிருந்த 25 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையை மீட்டு அதற்கு மறுவாழ்வு அளித்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், குழந்தையை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

தற்போது குழந்தை நலமாக உள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட தாய் மிதிலா மற்றும் அவரது தாயாரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மிதிலாவின் வயது குறைவாகத் தெரிவதால், அவர் சிறுமியா? என்பது குறித்தும், அவர் எப்போது கர்ப்பம் அடைந்தார்? அதன் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குழந்தையை உரிய நேரத்தில் காப்பாற்றிய இளைஞரை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

The post கணவர் வீட்டாரின் பழிப்பேச்சுக்கு அஞ்சி 25 நாள் பச்சிளங் குழந்தையை குளத்தில் வீசிய தாய் கைது: மறுவாழ்வு அளித்த இளைஞருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: