டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இன்று மாலை குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார்

டெல்லி : ஜி20 மாநாட்டையொட்டி குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஜி-20 நாடுகளின் 18வது உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.

உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ‘ஜி-20’ மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று விருந்தில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று காலை 10.05 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி புறப்பட்டு சென்றார்.

முதலமைச்சரை சென்னை விமான நிலையத்தில், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் கலந்து கொண்டு விட்டு, நாளை காலை 9:50 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் இருந்து புறப்பட்டு, பகல் 12.40 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

The post டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இன்று மாலை குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: