கொரோனாவுக்குப் பின் களைகட்டும் செட்டிநாடு சுற்றுலா: பாரம்பரிய கட்டடங்களைக் கண்டு வியக்கும் சுற்றுலா பயணிகள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொரோனாவுக்கு பிறகு மீண்டும் சுற்றுலாப்பயணிகளின் வருகை களைகட்ட தொடங்கியுள்ளது. காரைக்குடியை மையமாக வைத்து 96 நகரத்தார் ஊர்கள் உள்ளனர். அங்குள்ள ஒவ்வொரு வீடும் அரண்மனை போல தோற்றம் அளிக்கும் பர்மா தேக்கு மூலம் கலைநயத்துடன் செய்யப்பட்ட நிலை கதவுகள், பிரமாண்ட தூண்கள், ஜப்பான் டைல்ஸ், பெல்ஜியம் கண்ணாடிகள், இத்தாலி மார்பில், ஆத்தங்குடி பூக்கர்கள், கண்கவர் குழல் விளக்குகள் என்று வீட்டின் ஒவ்வொரு பகுதியும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருக்கும்.

வரவேற்பறை பந்திக்கட்டு, முன்கட்டு, பின்கட்டு என மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய இரண்டு ஏக்கர் வரையிலான பாரம்பரிய பங்களாக்கள் காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் ஏராளம் காரைக்குடி பாரம்பரிய சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் மார்ச் வரை ஏராளமான வெளிநாட்டு பயணிகள் இந்த வீடுகளை பார்வையிட்டு வந்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து ஒரு வித தேக்க நிலை நிலவியது. இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் காரைக்குடியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர் என்பதால் இனி சுற்றுலா களைகட்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

The post கொரோனாவுக்குப் பின் களைகட்டும் செட்டிநாடு சுற்றுலா: பாரம்பரிய கட்டடங்களைக் கண்டு வியக்கும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: