சென்னை நோக்கி வந்த ரயில் விபத்தில் சிக்கி பலியான இளைஞனின் உடலை தேடி 3,000 கி.மீ அலைந்த சகோதரன்: பீகார், ஒடிசா, மேற்குவங்கத்தில் நடந்த பரிதாபங்கள்

சம்பாரண்: சென்னை நோக்கி வந்த ரயில் விபத்தில் சிக்கி பலியான இளைஞனின் உடலை தேடி சுமார் 3,000 கி.மீ அலைந்த சகோதரனின் சோக கதை, தற்போது பீகார், ஒடிசா, மேற்குவங்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் பலர் இறந்த தங்களது உறவுகளை தேடி அலைகின்றனர். இந்நிலையில் பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம் மோதிஹாரி தொகுதிக்கு உட்பட்ட லகுரா கிராமத்தில் வசிக்கும் ராஜ் (22) என்பவர் கடந்த 2ம் தேதி சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக பலியான பயணிகளில் ஒருவரான ராஜின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடன் சென்ற மீது 8 பேர் உயர் தப்பிய நிலையில், ராஜ் மட்டும் கிடைக்கவில்லை. அதனால் ராஜின் சகோதரர் சுபாஷ், தனது அண்ணனின் உடலை தேடி மோதிஹாரியில் இருந்து சுமார் 800 கிமீ தொலைவில் உள்ள பாலசோருக்கு சென்றார்.

அவருடன் தனது தாயார் லீலாவதி தேவி மற்றும் அவர்களது கிராமத்தைச் சேர்ந்த 8 பேரை அழைத்துக் கொண்டு ஒரே வாகனத்தில் சென்றனர். விபத்து நடந்த இடத்தை சென்றடைய ஒரு நாள் ஆனது. அங்கு பலரது சடலங்கள் மீட்கப்பட்டிருந்த போது, ராஜியின் உடலை அவர்களும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக பல்வேறு மருத்துவமனைகளின் பிணவறைக்கு அனுப்பப்பட்ட சடலங்களை நேரில் சென்று பார்த்தனர். இருந்தும் ராஜியை கண்டுபிடிக்க முடியவில்லை. கையில் இருந்த பணம் செலவானதால், மீண்டும் வீடு திரும்ப முடிவு செய்தனர். தனது சகோதரன் மாயமானது குறித்து பீகார் அரசின் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இருந்தும் கடைசி முயற்சியாக, தனது குடும்ப உறுப்பினர்களுடன் புவனேஸ்வருக்குச் சென்றார். அங்குள்ள எய்ம்ஸ் பிணவறையில் பலரது உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதன்பின் நடந்த சம்பவங்கள் குறித்து சுபாஷ் கூறுகையில், ‘எய்ம்ஸ் மருத்துவமனையின் எல்இடி திரையில் இறந்தவர்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டன. எனது சகோதரரின் இடது கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும். அதன்படி திரையில் காட்டப்பட்ட உடல் ஒன்றில் பச்சை குத்தப்பட்ட அடையாளம் இருந்தது. ஆனால் அந்த உடல் குறித்த விபரங்களை கேட்ட ேபாது, அங்கிருந்த அதிகாரிகள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஏற்கனவே அந்த உடலை வாங்கிச் சென்றதாக கூறினர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தோம்.

பீகார் மாநில அதிகாரியின் ஆலோசனையின் பேரில், எனது தாயாரின் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளை கொடுத்தோம். டிஎன்ஏ அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறு அதிகாரி கேட்டுக் கொண்டார். இதற்கிடையே மேற்குவங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி, ராஜின் உடலை மேற்கு வங்கத்தில் இருந்து புவனேஸ்வருக்கு அனுப்பிவைத்தனர். அதன்பின் ராஜியின் உடலைப் பெற்றோம். இறந்த ராஜியின் பேன்ட் பாக்கெட்டில் ஆதார் அடையாள அட்டை மற்றும் கையில் பச்சை குத்திய அடையாளம் இருந்ததால், அதிகாரிகள் விசாரணை நடத்தி எங்களிடம் ராஜியின் உடலை ஒப்படைத்தனர். விபத்து நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு, காணாமல் போன எனது சகோதரனின் சடலத்தைக் கண்டுபிடித்தோம். இதற்காக சுமார் 3,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தோம். பயணத்திற்காக மட்டும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துவிட்டோம்’ என்று சோகத்துடன் கூறினர்.

The post சென்னை நோக்கி வந்த ரயில் விபத்தில் சிக்கி பலியான இளைஞனின் உடலை தேடி 3,000 கி.மீ அலைந்த சகோதரன்: பீகார், ஒடிசா, மேற்குவங்கத்தில் நடந்த பரிதாபங்கள் appeared first on Dinakaran.

Related Stories: