குடிநீர் விநியோகம் அடிக்கடி தடைபடுவதை தவிர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: மதுரவாயல் எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதி வலியுறுத்தல்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மதுரவாயல் எம்எல்ஏ காரப்பாக்கம் க.கணபதி (திமுக) பேசுகையில், ‘‘மதுரவாயல் தொகுதி, 143வது வார்டு, நொளம்பூர் பகுதிக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் குடிநீர் வழங்க அரசு ஆவன செய்யுமா?’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 143, பகுதி 11 நொளம்பூர் பகுதியில் உள்ள 232 தெருக்களில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, டிசம்பர் 2018 முதல் 226 தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள 6 தெருக்களில் 377 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் ரூ.42.15 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டன” என்றார்.

க.கணபதி: மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் சென்னை மாநகராட்சி மண்டலம் 11, வார்டு எண் 143ல் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பைப் லைன் அமைக்கப்பட்டு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதுள்ள பிரச்னை என்னவென்றால், அங்குள்ள குடிநீர் தொட்டி கொள்ளளவு குறைவாக இருக்கிறது. அதனால், குடிநீர் விநியோகம் அடிக்கடி தடைபடுகிறது. அது ஒரு பெரிய குறையாக இருக்கிறது. ஆகவே, கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைக் கட்டி, அதிக கொள்ளளவில் நீரை தேக்கி, அதன் மூலமாக குடிநீர் வழங்கினால் முழுக் கொள்ளளவு நீரையும் பொதுமக்கள் எல்லோரும் பயன்படுத்திக் கொள்வார்கள். இதை நிறைவேற்றி தர வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு: எஞ்சிய பகுதிகளிலும் குடிநீர் வழங்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்.

இப்போதுதான் குடிநீர் தொட்டிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டுமென்று கேட்டிருக்கிறார். அதைப்பற்றி அதிகாரிகளுடன் கலந்து பேசி, உடனடியாக அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நிர்த்தேக்கத் தொட்டிகளைக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள வளசரவாக்கத்தில், இந்த அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அந்த பகுதியில் என்னென்ன பணிகள் நடந்து கொண்டிருக்கின்றவோ அந்த பணிகள், 2023ம் ஆண்டு 6வது மாதத்தில் முடிக்கப்படும். அனைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. தற்போது, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post குடிநீர் விநியோகம் அடிக்கடி தடைபடுவதை தவிர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: மதுரவாயல் எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: