அதிமுக கூட்டணியில்தான் பாஜ உள்ளது: ராஜ்நாத் சிங் பேச்சு

தாம்பரம்: அதிமுக கூட்டணியில்தான் பாஜ உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை தாம்பரம், சண்முகம் சாலையில் நடந்தது. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழகத்தின் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் மோகன ராஜா, மாவட்ட பொருளாளர் செரியன் சி.சுகுமார், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.கே.எஸ்.சக்திவேல், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சூரியநாராயணன், ஓபிசி அணி, மாவட்ட தலைவர் பாலாஜி தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உயர்ந்த 25 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2023-24ம் ஆண்டுகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் 6ஜி அலைக்கற்றை பயன்படுத்துவற்கான முயற்சிகளை பிரதமர் மோடி முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். டெல்லியில் இருந்து 100 ரூபாய் அனுப்பினால் மக்கள் கைகளுக்கு 14, 15 ரூபாய்தான் சென்றடைகிறது. மற்றவை ஊழல்வாதிகளின் கைகளுக்கு செல்கிறது என்று முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கூறினார். ஆனால், இன்று டெல்லியில் இருந்து 100 ரூபாய் அனுப்பினால் அந்த பணம் முழுமையாக அப்படியே மக்கள் கைகளுக்கு செல்கிறது.

ஊழலை ஒழிக்க சிறப்பான செயலை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். தமிழகத்தை ஒட்டுமொத்தமாக முன்னேற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் ஆசை. வாஜ்பாய் போன்று தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அன்பும், பாசமும் கொண்டுள்ளார். அதிமுகவுடன் கூட்டணியில் பாஜ உள்ளது. கூட்டணி தர்மப்படி, கூட்டணி கட்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க எப்போதும் தயாராக உள்ளோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

The post அதிமுக கூட்டணியில்தான் பாஜ உள்ளது: ராஜ்நாத் சிங் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: