திருமலை: பாஜக- ஜனசேனா கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இல்லை என்று டெல்லியில் நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜக கூட்டணி தலைவர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜன சேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு முன்பு பவன் கல்ணாய் நிருபர்களிடம் கூறியதாவது: ஜனசேனா கட்சியின் நோக்கம் ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் பிளவுபடக் கூடாது. கடந்த 2014ல் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி இணைந்து போட்டியிட்டது. கடந்த 2019ல் பிரிவினை ஏற்பட்டது. பாஜகவும் ஜனசேனாவும் மீண்டும் இணைந்தாலும், தெலுங்கு தேசம் மற்றும் பாஜக இடையே புரிந்துணர்வு பிரச்னை உள்ளது. அவர்களின் பிரச்னைகளை பேசுவது ஏற்புடையது அல்ல. எங்கள் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது ஒரு பிரச்னை இல்லை. ஜனசேனா கட்சியினர் என்னை முதல்வராக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தெளிவுபடுத்தப்படும்.
ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது மட்டுமே எனது முன்னுரிமை. ஆதார் போன்ற பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு ஏன் கொடுக்கப்பட வேண்டும். ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர். தெலங்கானாவில் ஐரிஷ், ஆதார் மற்றும் வங்கி கணக்குகள் போன்ற முக்கியமான தனிநபர் தரவுகள் சேமிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை உள்ளது. உள்கட்டமைப்பு முழுமையாக இல்லை. ஊழியர்களுக்கு முறையான சம்பளம் கிடைப்பதில்லை. இதுபோன்றவை கேள்வி கேட்க ஜனசேனா முன் வந்துள்ளது. அதற்கு மக்கள் ஆதரவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜக- ஜனசேனா கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இல்லை: டெல்லியில் நடிகர் பவன் கல்யாண் பேட்டி appeared first on Dinakaran.