டெல்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஏஐ’ துறையில் 3.38 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ‘சர்வீஸ் நவ்’ நிறுவனம் கணித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ‘சர்வீஸ் நவ்’ என்ற அமெரிக்காவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு பெரும் பங்கு வகிக்கும். இருப்பினும், இது சிறந்த தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட நபர்களின் தேவையை அதிகரிக்கும். இதனுடன் நிலையான மற்றும் புத்திசாலித்தனமான தொழில் வாய்ப்புகளும் அதிகரிக்கும். செயற்கை நுண்ணறிவின் நோக்கம் விரிவடையும் போது, தொழில் வல்லுநர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள அனுமதிக்கும் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு மற்றும் தரவு பொறியியல் போன்ற துறைகளில் திறன்களை மேம்படுத்துவது அவசியமாகிவிட்டது. இந்த துறைகளில் இந்தியா தனது திறமையான தொழிலாளர் சக்தியை மிகத் திறமையானதாக மாற்றினால், உலக தொழில்நுட்ப பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் இருக்க முடியும். இதற்காக, திறன்மேம்பாட்டிற்கான பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பில் இந்தியா விரைவாக முதலீடு செய்ய வேண்டும். இதனால் எதிர்காலத்தில் நாம் வலுவாக இருக்க முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன், இந்தியாவில் வேலைகளுக்கான தேவை கணிசமாக அதிகரிக்கும் என்பதால், அதுசார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் அவ்வப்போது தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வருகிற 2028ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை 45.72 கோடியாக உயரும்.
வரும் 2023ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 42.37 கோடியாக இருந்தது. அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 3.38 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வேலைகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப பயன்பாடு ஆகும். தொழில்நுட்பத் துறையில் அதிகபட்சமாக 27.3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். உற்பத்தித் துறையில் 15 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளும், கல்வித் துறையில் 84 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளும், சுகாதார சேவையில் 80 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
The post இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஏஐ’ துறையில் 3.38 கோடி புதிய வேலைவாய்ப்புகள்: ‘சர்வீஸ் நவ்’ நிறுவனம் கணிப்பு appeared first on Dinakaran.