பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தில் கொட்டப்படும் மெட்ரோ ரயில் கட்டுமான கழிவால் சுகாதார சீர்கேடு: மாநகராட்சி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார்

வேளச்சேரி: பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தில் கொட்டப்படும் மெட்ரோ ரயில் கட்டுமானக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளின்போது அகற்றப்படும் கட்டிட கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளை லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு, பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் உடைந்த பாலம் செல்லும் வழியில் உள்ள காலி இடத்தில் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதாகவும், சுகாதார சீர் கேட்டால் உடல் உபாதைகளும் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி அறிந்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உடனடியாக இதுபற்றி நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் பகுதியில் நேற்று ஆய்வு செய்தபோது பல மாதங்களாக அந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணியின்போது அகற்றப்படும் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்படுவது தெரியவந்தது. இதையடுத்து பொது இடத்தில் கொட்டப்படும் கழிவுகளால் போக்குவரத்து இடையூறு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சென்னை பெருநகர மாநகராட்சி பெசன்ட் நகர் 174வது வார்டு உதவி செயற்பொறியாளர் அசோக் நேற்று சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தில் கொட்டப்படும் மெட்ரோ ரயில் கட்டுமான கழிவால் சுகாதார சீர்கேடு: மாநகராட்சி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: