முதலில் பேட் செய்தாலும் சேசிங் மனநிலையில் ஆடினோம்: ஆட்டநாயகன் சூர்யகுமார் மகிழ்ச்சி

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 57வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 218 ரன் குவித்தது. ஐபிஎல்லில் முதல் சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் 103 ரன் (49 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். குஜராத் பவுலிங்கில் ரஷித்கான் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில் ரஷித்கான் நாட் அவுட்டாக 32 பந்தில், 3 பவுண்டரி, 10 சிக்சருடன் 79, டேவிட் மில்லர் 41 ரன் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களே எடுத்தது. இதனால் 27 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றிபெற்றது. 12வது போட்டியில் 7வது வெற்றி பெற்ற மும்பை 14 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தது. சூர்யகுமார் ஆட்டநாயகன் விருதுபெற்றார். வெற்றிக்கு பின் மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், “எங்களின் பார்வையில் எங்களுக்கு இது மிகவும் சுவாரசியமான ஒரு போட்டி.

2 புள்ளிகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சி. நல்ல ரன்களை எடுத்து பின்பு எதிரணியை கட்டுப்படுத்தியது மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்தோம். இந்த வடிவத்தில் இது மிகவும் முக்கியம். எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சு முயற்சி இது. நாங்கள் பேட்டிங் ஆர்டரில் வலது-இடது கலவையை வைத்திருக்க விரும்பினோம், ஆனால் சூர்யா என்னிடம், என்ன நடந்தாலும் தான் 3வதாக களமிறங்க போவதாகக் கூறினார். அதுவே அவருக்கு இருக்கும் நம்பிக்கை. அது மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. அவர் பழைய ஆட்டங்களைப் பற்றி நினைக்காமல் ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிதாகத் தொடங்குகிறார். சில நேரம் நீங்கள் உட்கார்ந்து உங்களின் சிறந்த பழைய ஆட்டங்கள் குறித்து பெருமைப்படலாம். ஆனால் சூர்யா அப்படி கிடையாது,” என்றார். ஆட்டநாயகன் சூர்யகுமார் கூறுகையில், “என்னுடைய சிறந்த டி20 ஆட்டத்தில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.

நான் ரன்கள் எடுக்கும் போதெல்லாம் அணி வெற்றி பெறவேண்டும் என்பதுதான் எனது முதல் எண்ணம். மிக முக்கியமாக நாங்கள் இன்று முதலில் பேட்டிங் செய்தோம். 200, 220 ரன்களை சேஸ் செய்வதாக இருந்தால் எப்படி விளையாடுவோமா அதேபோல் விளையாடலாம் என்று பேசிக்கொண்டோம். மைதானத்தில் நிறைய பனி இருந்தது. அது ஆரம்பத்தில் 7, 8 ஓவர்களின் போதே இருந்தது. என்ன ஷாட்கள் அடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நேராக அடிப்பது பற்றி நான் யோசிக்கவில்லை. என் மனதில் இரண்டு ஷாட்கள் இருந்தன. ஒன்று பைன் லெக், இன்னொன்று தேர்ட் மேன். 360 டிகிரி கோணத்தில் ஷாட் ஆட வேண்டும் என்றால் நிறைய பயிற்சி தேவை. அப்போதுதான் களத்திற்கு வரும்போது உங்கள் மனநிலை தெளிவாக இருக்கும்” என்றார்.

The post முதலில் பேட் செய்தாலும் சேசிங் மனநிலையில் ஆடினோம்: ஆட்டநாயகன் சூர்யகுமார் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: