அடிப்படை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை: உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வில் நேற்று தொடங்கியது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், 2022 ஜூலை 11 பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமாக கட்சியில் இருந்து என்னை நீக்கினர். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கவில்லை. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில், கட்சியில் இருந்து நீக்கும் போது கட்சியின் சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்பதை தனி நீதிபதி ஒப்புக் கொண்டுள்ளார். கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கவில்லை.

உரிய நடைமுறையை பின்பற்றாமல் நடவடிக்கை எடுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக எப்படி கூற முடியும். திமுகவுடன் இணக்கமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சி தலைவர்களும் சந்தித்துக் கொள்ளும் போது பேசிக்கொள்வது கிடையாது. பொதுக்குழு கூட்டம் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம் என்பது திடீரென ஏற்பட்டது. சம்பவம் நடந்த போது அங்கிருந்தவர்கள் எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தான்.

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிட தகுதியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி விட்டு தேர்தலை நடத்தியுள்ளனர். கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பது கட்சியின் நலனுக்கு விரோதமானது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் எப்படி கூற முடியும்? போட்டியிட விரும்பிய தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது அவருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேலும் ஒரு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி, கட்சியின் நிறுவனரின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தீர்மானங்கள் செல்லும் என்று தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். பொதுக்குழுவில் பெரும்பான்மை இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்படுகிறது. ஆனால், அதன் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது என்பதே கட்சி நிறுவனரின் நோக்கம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்து இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்து பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நிபந்தனைகள் விதித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தன்னிச்சையானவை, சட்டவிரோதமானவை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது குறித்து நீதிமன்றம் இதுவரை முடிவெடுக்கவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக கூறுவதன் மூலம் அடிப்படை உறுப்பினர்களின் தீர்ப்பை மீறுகின்றனர். கடந்த 2021 டிசம்பரில் இருந்து இரட்டை தலைமை அமலில் இருந்த நிலையில் ஜூன் 23ம் தேதி திடீரென ஒற்றை தலைமை குறித்து பேசப்பட்டது. ஒற்றை தலைமை குறித்து கட்சியினர் மத்தியில் எந்த கருத்துக் கணிப்பும் நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று கூறிய தீர்ப்பின் அடிப்படையிலும், பொதுக்குழு பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலும் தீர்மானங்கள் செல்லும் என்று தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளது தவறு என்று வாதிட்டார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் இன்றும் தொடர்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது குறித்து நீதிமன்றம் இதுவரை முடிவெடுக்கவில்லை.

The post அடிப்படை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை: உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: