பைபர்ஜாய் புயல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்பு

டெல்லி: பைபர்ஜாய் புயல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அரபிக்கடலில் மையம் கொண்டு இருந்த பைபர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்துள்ளது.

தற்போது இந்த புயலானது வடகிழக்கு, ஒட்டிய மத்திய வழக்கு அரபிக்கடலில் ஜக்காவு துறைமுகத்திற்கு 360 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்லும் இந்த புயல், நாளை காலை வரை வடக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, அதன்பிறகு வடக்கு – வடகிழக்குப்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை மறுநாளான ஜூன் 15ம் தேதி பிற்பகலில் மாண்ட்வி (குஜராத்)- கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவ் துறைமுகம் (குஜராத்) அருகே பாகிஸ்தான் கடலோரப் பகுதியையொட்டி சௌராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும் போது காற்று மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பைபர்ஜாய் புயல் குறித்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

பாதுகாக்கப்படக்கூடிய இடத்தில் இருக்கும் மக்கள் மாநில அரசால் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்யவும் மின்சாரம், தொலைத்தொடர்பு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகளின் பராமரிப்பை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பைபர்ஜாய் புயல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post பைபர்ஜாய் புயல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: