அவிநாசி அருகே சிறுத்தைகள் நடமாட்டம்: வனத்துறையினர் ஆய்வு

அவிநாசி: அவிநாசி ஒன்றியம் போத்தம்பாளையம் ஊராட்சி மற்றும் புலிப்பார் ஊராட்சியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம், போத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. இவர் நேற்று போத்தம்பாளையத்திலிருந்து, புலிப்பார் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 2 சிறுத்தைகள், நாய்க்குட்டியை துரத்திக்கொண்டு வேகமாக பாய்ந்து சென்றுள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த அவர், பொதுமக்களிடையே தெரிவித்துள்ளார்.

இது குறித்து தாசில்தார், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் வித்தியாசமான காலடித்தடம் இருப்பதால், அது சிறுத்தையின் காலடித்தடமா? அல்லது செந்நாய்களின் காலடித்தடமா? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தகவலின் பேரில், அவிநாசி தாசில்தார் மோகனன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வருவாய்த்துறையினர், போலீசார் உள்ளிட்டோர் போத்தம்பாளையம் பகுதியில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் வனத்துறை அலுவலர் முருகானந்தன் தலைமையில் குழுவினர் முகாமிட்டுள்ளனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிநாசி வட்டாரப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போத்தம்பாளையம் ஊராட்சி அருகே பாப்பாங்குளம் ஊராட்சி பகுதியில் சிறுத்தை பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post அவிநாசி அருகே சிறுத்தைகள் நடமாட்டம்: வனத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: