ரூ96 ஆயிரம் கோடிக்கு விடப்பட்டு ரூ11,340 கோடிக்கு மட்டுமே ஏலம் போன 5ஜி ஸ்பெக்ட்ரம்: ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்

புதுடெல்லி: ரூ.96 ஆயிரம் கோடிக்கு ஏலம் விடப்பட்ட நிலையில், தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் வெறும் ரூ.11,340 கோடிக்கு மட்டுமே 5ஜி அலைக்கற்றை ஏலம் போனது. நாடு முழுவதும் அதிவேக 5ஜி சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் ஒன்றிய தொலைதொடர்பு துறை 5ஜி அலைக்கற்றைகளின் 2ம் கட்ட ஏலத்தை நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ், 2,100 மெகா ஹெர்ட்ஸ், 2,300 மெகா ஹெர்ட்ஸ், 2,500 மெகா ஹெர்ட்ஸ், 3,300 மெகா ஹெர்ட்ஸ், 26 ஜிகா ஹெர்ட்ஸ் ஆகிய 8 பேன்ட்களில் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.96,238 கோடி. இந்த ஏலத்தில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன. முதல் நாளில் ரூ.11,000 கோடிக்கு ஏலம் போன நிலையில் நேற்றைய 2ம் நாளில் வெறும் ரூ.300 கோடிக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய 2ம் நாளில் ஏலம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஏலம் முடிவதாக அறிவிக்கப்பட்டது. அரசு ஏலம் விட்ட ரூ.96,238 கோடி அலைக்கற்றைகளில் வெறும் 12 சதவீதமான ரூ.11,340 கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஏலம் போனது. அப்போது 72 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட்ட நிலையில் தற்போது 10.5 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் மட்டுமே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

The post ரூ96 ஆயிரம் கோடிக்கு விடப்பட்டு ரூ11,340 கோடிக்கு மட்டுமே ஏலம் போன 5ஜி ஸ்பெக்ட்ரம்: ஆர்வம் காட்டாத நிறுவனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: