ஜோதிட ரகசியங்கள்

ஒருவருடைய வழக்கு விஷயங்களில் வெற்றி பெற பொதுவாகவே ஒரு சிலர் அடிக்கடி வழக்குகள், கோர்ட் என்று போய்க் கொண்டே இருப்பார்கள். வாழ்நாள் முழுக்க கோர்ட்டிலேயே கழிப்பவர்களும் உண்டு. ஏதாவது ஒரு வழக்கு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஜாதகத்தில் உள்ள சில கிரகநிலைதான் காரணம். ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது பகையைக் குறிப்பது. பகை இருந்தாலே வழக்குகள் வந்துவிடும் அல்லவா. 8-ஆம் இடமும் 12-ஆம் இடமும் வழக்குகளில் அகப்பட்டு சிறை வாசத்தை அனுபவிப்பதைக் காட்டுகின்றது. எனவே 6,7,8,12-ஆம் இடங்கள் வழக்குகள், வம்புகள், பிரச்னைகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

அதில் ஆறாம் வீடு மிக முக்கியமானது. எட்டாம் இடம் என்பது சட்டச் சிக்கல்களையும், மன உளைச்சல்களையும், வருத்தங்களையும், அவமானங்களையும் குறிப்பது. 12-ஆம் இடம் என்பது கோர்ட்டு வழக்குகளில் நம்முடைய பணம் தண்ணீர் போல் செலவாவதையும், நஷ்டத்தையும் குறிக்கிறது. பொதுவாகவே, ஆறாம் வீடு பலமடையாமல் ஐந்தாம் வீடு பலம் அடைந்தால் ஆறாம் வீட்டினுடைய எதிர்மறை பலன்கள் வீழ்ச்சி அடையும். அதைப் போலவே 12-ஆம் இடம் பலமடையாமல், 11-ஆம் இடம் பலம் அடைவதன் மூலமாக எந்தச் சிக்கல் அல்லது வழக்குகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். அப்படியே வழக்குகள் வந்தாலும் வெற்றி தான் வரும்.

இதே 6,8,12-ஆம் இடங்கள் சுபத்துவம் பெற்றிருந்தாலும் வழக்குகள் வராது. வந்தாலும் நிற்காது. சரி அப்படி வந்துவிட்டால் என்ன பிராயாச்சித்தம் செய்வது? வழக்கு விஷயங்களில் வெற்றி பெற விரும்புபவர்கள், சகல காரிய சித்தி தரும் சுதர்சன ஹோமத்தை ஒருமுறை நடத்தலாம் அல்லது ஸ்ரீசுதர்சன மாலா மந்திரத்தை தினம் காலையில் 27 முறை பக்திச் சிரத்தையுடன் பாராயணம் பண்ணலாம். இதன் மூலம் அனைத்துக் கஷ்டங்களும் நீங்கும். வழக்குகள்
வெற்றியடையும்.

“ஓம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய
கோபீஜன வல்லபாய பராய பரம்புருஷாய பரமாத்மனே
பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர, ஒளஷத அஸ்த்ர
சாஸ்த்ராணி ஸம்ஹர ம்ருத்யோர் மோசய
மோசய ஓம் நமோ பகவதே மஹா
ஸுதர்சனாய தீப்த்ரே ஜ்வாலா பரீதாய
ஸர்வதிக் ஷோபன கராய ஹும் பட்
ப்ரம்மனே பரம் ஜோதிஷே ஸ்வாஹா!!’’

நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பு

உங்கள் லக்னத்தில் சந்திரன் இருந்தால், கீழ்க்கண்ட பலன்களை எதிர்பார்க்கலாம். வளர்பிறை சந்திரனாக இருந்தால்,

1. கல்வி அறிவில் நிறைவு இருக்கும்.
2. நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும்.
3. உணவு உடைக்குக் கவலையில்லாத நிலை இருக்கும்.
4. உத்தியோகத்தில் மதிப்பு மரியாதையும் கௌரவமும் இருக்கும்.
5. அரசு விருதுகள் கிடைக்கும். பிரபலமடையும் யோகமும் உண்டு
6. தன்னுடைய நிலையைவிட மேல்பட்டவர்களுடன் நட்பு ஏற்படும்.
7. வாகன யோகம் உண்டு.
8. பிறரை வசீகரிக்கும் தன்மையும் பேச்சு வன்மையும் உண்டு.

தேய்பிறைச் சந்திரனாக இருந்தாலும் 6,8,12-க்குரியவர் பார்வை சேர்க்கை இருந்தாலும், இந்த நிலைமாறும். காதுகேளாமை, வாய்பேசமுடியாமல் இருத்தல் போன்றவைகளால் பாதிக்கப்படும். வழக்குகளில் தந்திரங்களை கையாளும் நிலை ஏற்படும். இந்தப் பலன்கள் பெரும்பாலும் சந்திரனுடைய தசா புத்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும்.

நீங்களே சுபநாள் குறிக்கலாம்

எப்படி முகூர்த்தம் வைக்க வேண்டும்? என்பதற்கு இந்த எளிய விதிகளைத் தெரிந்து கொள்ளுங்கள். பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறியுங்கள் அல்லது குறித்த நாள் குறித்து, சரி பார்க்கவும். இந்த டிப்ஸ் உதவும்.

1. இரண்டு அமாவாசை, இரண்டு பௌர்ணமி உடைய மல மாதங்களில் திருமணம் வைக்கக் கூடாது.
2. வளர்பிறை நாளாக இருக்க வேண்டும்.
3. புதன், வியாழன், வெள்ளி மிகச் சிறப்பான நாட்கள்.
4. தமிழ் மாதங்களில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி சிறப்பான மாதங்கள்.
5. திதிகளில், துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, சுக்ல திரயோதசி சிறந்த திதிகள்.
6. லக்னங்களில் மேஷம், விருச்சிகம், மகரம், கும்பம், தவிர மற்ற லக்கினங்கள் சிறந்தது.
7. முகூர்த்த லக்கினத்திற்கு ஏழாம் இடம் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
8. ரோகிணி, மிருகசீரிஷம், மகம், உத்
திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் நலம்.
9. அக்னி நட்சத்திரக் காலங்கள், மிருத்யு பஞ்சகம், கசர யோகம் போன்ற காலங்களை தவிர்க்க வேண்டும்.
10. அமாவாசை, பௌர்ணமி கூடாது.
11. இருவரின் பிறந்த தேதியும், கிழமையும் இருக்கக் கூடாது. அன்றைய சந்திர ராசி இருவருக்கும் எட்டாவது ராசியாக இருக்கக் கூடாது.
12. சுக்கிரன், குரு போன்ற கிரகங்கள் திருமண லக்னத்திற்கும், மணமக்களின் ராசிக்கும் ஆறில் இருக்கக் கூடாது.

இவைகள் எல்லாம் அனுசரித்து நாள் குறிப்பது நல்லது.

சோம்பல் உங்களை ஆட்டிப் படைக்கிறதா?

உங்கள் லக்கினத்தில் சனி இருந்தால், கீழ்க்கண்ட பலன்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புண்டு.

1. பெரும்பாலும் சோம்பல் உங்களை ஆட்டிப் படைக்கும்.
2. எதிலும் ஞாபக மறதி இருக்கும். எதையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுவிட்டு வருத்தப்படுவீர்கள்.
3. அதிக நேரம் தூங்குவீர்கள்.
4. காம இச்சை அதிகமாக இருக்கும்.
5. உடம்பில் ஏதாவது ஒரு பாதிப்பு இருக்கும்.

ஆனால், இந்த சனிக்கு சுபப் பார்வை கிடைத்தால், பலன்கள் மாறும். கஷ்டப்பட்டாலும் பலன் கிடைத்துவிடும். உலக அனுபவமும், கல்வியும் ஏற்படும். கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் இவை லக்னமாகி சனி இருந்தால், நல்ல அழகும் சுகபோகங்களை அனுபவிக்கும் வாய்ப்பும் இருக்கும். சனியோடு ராகு சேர்க்கை பெறக் கூடாது.

தொகுப்பு: பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Related Stories: