தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 73 (பகவத்கீதை உரை)

ச்ரத்தாவான்லபதே ஞானம் தத்பர ஸம்ய தேந்த்ரிய
ஞானம் லப்த்வா பராம் சாந்திமசிரேணாதிகச்சதி (4:39)
‘‘தன் புலன்களை முற்றிலும் அடக்கி, அமைதியாக, மிகுந்த சிரத்தையுடன் கர்மாக்களை இயற்றுபவன் ஞானியாகிறான். இவ்வாறு ஞானத்தைப் பெற்ற அக்கணமே அவன் பரம ப்ராப்தியான சாந்தியை அடைகிறான்.’’ புலனடக்கம் என்றால் என்ன? புலன்களின் இயல்புக்கு எதிராக நடந்து கொள்வதா? அது சாத்தியமா? புலன்களுக்கு எதிராக, அவற்றை முற்றிலும் புறக்கணித்து வாழ இயலுமா? ஆகவே, புலனடக்கம் என்பது புலன்களை முழுமையாக அறிவதும், அவற்றின் ஈர்ப்புகளுக்குரிய பொருட்கள் மேல் நாம் ஆர்வம் காட்டாதிருப்பதும்தான்.

அமரர் தென்கச்சி சுவாமிநாதன், புலனடக்கம் பற்றி மிக அழகாக ஒரு கதை சொன்னார்; ஒரு துறவி, தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த வழியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பெண் கடந்து செல்வாள். கண்களை மூடி, தன் மனதை ஒருநிலைப்படுத்த முயன்ற துறவி, அவளுடைய கால் கொலுசு சத்தம் கேட்டு சற்றே சலனமுற்றார். தன்னுடைய இந்த பலவீனத்தை, தன் கோபத்தால் மறைக்க முயன்றார். உடனே கண் திறந்து பார்த்து, ‘‘ஏ, பெண்ணே! நான் ஆழ்ந்த நிஷ்டையில் ஆழ்ந்திருக்கிறேன், நீ உன் கொலுசு சத்தத்தால் அதற்கு பங்கம் விளைவிக்கிறாயே!’’ என்று அவளிடம் சினந்தார். உடனே அந்தப் பெண் பதறிப் போய் அப்போதே தன் கால் கொலுசுகளைக் கழற்றி, சுமந்து வந்த கூடைக்குள் போட்டுக் கொண்டாள்.

‘ம்ம்ம்…’ என்று கர்வத்துடன் முனகினார் துறவி. அந்தப் பெண் அங்கிருந்து சென்றாள். மறுநாள் அதேநேரத்தில், அவள் வந்தபோது, துறவியை அவள் சூடியிருந்த மல்லிகை மலர் மணம் ஈர்த்தது. இன்றும் அவர் நிஷ்டை கலைந்தது; இன்றும் கோபப்பட்டார். ‘‘இந்தா, பெண்ணே, நீ மறுபடியும் என் நிஷ்டையை பாதிக்கிறாய். நீ சூடியிருக்கும் மல்லிகை மலரின் வாசத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை,’’ என்றார். இன்றும் அந்தப் பெண் உடனே தன் தலையிலிருந்து மல்லிகைச் சரத்தைக் கழற்றி தூர எறிந்தாள்.

‘ம்ம்ம்….’ என்று கர்வத்துடன் முனகினார் துறவி. அந்தப் பெண் அங்கிருந்து சென்றாள். அடுத்த நாள் துறவி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த நேரமும் வந்தது. ஆனால், எந்த பாதிப்பும் இல்லை. கண் திறந்து பார்க்கவும் அவருடைய தன்மானம் இடம் கொடுக்கவில்லை. கொலுசு சத்தம் இல்லை, மல்லிகை மணம் இல்லை. ஆனாலும், ‘அந்தப் பெண் இந்நேரம் இந்த வழியாக நடந்து சென்றிருப்பாள்’ என்று நினைத்துக் கொண்டார்! ஆக, புலனடக்கம் என்பது கொலுசு சத்தத்தையோ, மல்லிகை வாசத்தையோ, உணர்ந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இருப்பதுதான்.

இதனால் கொலுசு சிணுங்கினாலும் அதன் ஓசை காதுகளில் விழாது, மல்லிகை மணத்தாலும் அதன் வாசனை நாசியை எட்டாது! அந்த காலத்தில் குருகுலக் கல்வி முறையில் மாணவர்கள் குருவுடன் அவரது ஆசிரமத்திலேயே தங்கி பாடம் பயின்றார்கள். பாட நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்த மாணவர்கள் குருவுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்தார்கள்.

குருவினுடைய ஆடைகளைத் துவைத்துக் கொடுப்பது, ஆசிரமத்தைப் பெருக்கி, துடைத்து சுத்தம் செய்வது, சமையல் செய்வது, பாத்திரங்களைக் கழுவி வைப்பது போன்ற ஆசிரமத்து வேலைகளோடு, காட்டிற்குச் சென்று அன்றாட உணவுக்குத் தேவையான காய்கறி, கனிகளைப் பறித்து வருவது, கொடிய விலங்கு அல்லது அந்நியரிடமிருந்து ஆசிரமத்தைப் பாதுகாப்பது என்று அனாவசியமாக ஓய்வு கொள்ள முடியாதபடி, குரு, அவர்களை வேலை வாங்கி வந்தார்.

அவருக்குத் தெரியும், அனாவசிய ஓய்வு மாணவர்களுடைய வக்கிர உணர்வுகளைத் தூண்டிவிடும் என்று. அந்தச் சூழ்நிலையும் ஒருசமயம் வந்தது. மாணவர்களில் சிலர் இவ்வாறு ‘எடுபிடி’ வேலைகளைச் செய்வதில் வெறுப்புற்றார்கள். ‘நாம் மாணவர்கள், வேலைக்காரர்கள் அல்ல’ என்ற அகம்பாவம் அவர்களிடம் விழித்துக் கொண்டது. குருவிடம், ‘‘யாராவது பெண்மணியை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். அவள் செய்ய வேண்டிய வேலையெல்லாம் நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது!’’ என்று வெளிப்படையாகவே முறையிட்டார்கள்.

குரு அமைதியாகச் சொன்னார்; ‘‘அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேலைக்காக அமர்த்தப்படும் பெண்ணால், உங்கள் மனநிலை பெரிதும் பாதிக்கப்படலாம். அதனால் வேண்டாம்.’’ ‘‘இளம் பெண்ணாக ஏன் வேலைக்கு வைக்க வேண்டும்? வயது முதிர்ந்த பெண்ணை நியமிக்கலாமே!’’ என்று மாணவர்கள் தொடர்ந்து வாதிட்டார்கள்.அவர்களுக்கு அவர்களுடைய நிலையை உணர்த்த தீர்மானித்தார் குரு. ஒருநாள் அவர் அவர்கள் சமைத்து வைத்திருந்த உணவுப் பொருட்களில் அவர்களறியாமல் நிறைய காரத்தைச் சேர்த்தார்.

சக மாணவரால் பரிமாறப்பட்ட உணவை உண்ணத் தொடங்கிய மாணவர்கள், அதிலிருந்த காரம் காரணமாகக் கதற ஆரம்பித்தார்கள். நாக்கு, வாய், மூக்கு, கண்எல்லாமே எரிந்தன! குருவின் முன்னேற்பாட்டின்படி அவர்களருகே குடிநீர் வைக்கப்படவில்லை. பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே எழுந்துவிட்ட மாணவர்கள், தண்ணீரைத் தேடி ஓடினார்கள். வெளியே ஒரு தொட்டியில் நீர் நிரப்பப்பட்டிருந்தது. உடனே அதனருகே ஓடிய அவர்கள், அருகிலிருந்த குவளையால் மொண்டு அந்த நீரைக் குடித்தார்கள்.

காரம் கொஞ்சம் மட்டுப்பட்டது போலிருந்தது. சற்றே ஆறுதலடைந்தார்கள். அவர்களிடம் குரு வந்தார். ‘‘என்ன, உணவு ரொம்பவும் காரமாக இருந்ததோ?’’ என்று கேட்டார்.
‘‘ஆமாம்,’’ என்றார்கள் மாணவர்கள்.‘‘அந்தக் காரம் தீர இந்தத் தண்ணீரையா குடித்தீர்கள்?’’‘‘ஆமாம், ஏன்?’’‘‘அடடா, இது சாணம் கரைத்த நீரல்லவா? ஆசிரம சுவர்களில் பூச்சி வராமலிருக்கப்
பூசுவதற்காக வைத்திருந்தேனே!’’ மாணவர்கள் அருவெறுப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

`‘வயதான பெண்மணியாக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு வேலைக்காரியை நியமிக்க வேண்டும் என்றுதான் இப்போது நீங்கள் கேட்பீர்கள். ஆனால் அவளை ஒரு பெண்ணாக மட்டும் பார்த்து உங்கள் மனதை நீங்கள் அலையவிடுவீர்கள், அவளை அடையவும் முற்படுவீர்கள். ஆகவே, இந்த விஷப் பரீட்சை வேண்டாம். அந்த உணவில் காரத்தை நீங்கள் உணராமல் சாப்பிட்டிருந்தீர்களானால், அதனால் எரிச்சலடையாமல் இருந்தீர்களானால், நீங்கள் பக்குவப்பட்டவர்கள், உங்களுக்காக வேலைக்காரியை அமர்த்துவதில் ஆபத்தில்லை என்று நான் புரிந்து கொண்டிருந்திருப்பேன். அப்படி இல்லாததால், அவரவர், அவரவர் பணிகளை வழக்கம்போல செய்துகொண்டிருங்கள்,’’ என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார் குரு.

அக்ஞஸ்சாச்ரத்தானஸ்ச ஸம்ச்யாத்மா விநச்யதி
நாயம் லோகோஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்சயாத்மன (4:40)

‘‘அர்ஜுனா, பகவத் விஷயத்தை அறிந்துகொள்ளாதவன், அவ்வாறு அறிந்து கொள்வதில் ஆர்வமற்று இருப்பவன், எதிலும் சந்தேகத்துடனேயே வாழ்பவன் வீழ்ச்சியடைகிறான், அழிகிறான். இவற்றுள் சந்தேகத்துடன் வாழ்பவனுக்கு இப்போதைய உலகிலும் எந்த நலனும் கிட்டாது, பரலோகத்திலும் நன்மை உண்டாகாது. இம்மை, மறுமை இரண்டுமே அவனுக்கு விலக்காகி விடுகின்றன.’’ எதையுமே அறிந்துகொள்ளும் பக்குவமும் ஆற்றலும் பெற்றவன் மனிதன். அறிவை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு, அந்தப் பக்குவத்தை, பகவத் விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவனுடைய கடமையாகவே ஆகிறது. ஆனால், அப்படி அறிந்து கொள்ள ஆர்வமில்லாமல் அவன் இருப்பானானால், அந்த அறிவையும், பக்குவத்தையும் அவன் பெற்றிருப்பதில் என்னதான் அர்த்தமிருக்கிறது?

சரி, அவன் அறிவிலியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அவனிடம் சந்தேகமும் இருக்குமானால் அதைவிடக் கொடுமை எதுவுமில்லை. சந்தேகம் ஒருவனை முழு அழிவிற்கே இட்டுச் செல்கிறது. எதிலும், யாரிடத்திலும், எதற்கும் சந்தேகம் கொள்பவன் தனித்துவிடப்படுகிறான். அந்த சந்தேகத்தின் அடிப்படை அவனுடைய சொந்த நலம்தான். சூழ்நிலைகளும், சூழ்ந்திருப்பவர்களும், தனக்கு எதிராகவே இயங்குகின்றன(ர்) என்ற சந்தேகம், தனக்கு பெரு நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடியவை என்ற ‘நம்பிக்கை’யின் விளைவுதான்!

காட்டுவழியில் சென்றுகொண்டிருந்தான் ஒருவன். பக்கத்து கிராமத்துக்குப் போகவேண்டும். இருட்டு, விலங்கு, கள்ளர் பயம் நீங்கிக் காட்டுப்பாதையில் பயணிக்க வேண்டியிருந்ததால், பகவான் நாமத்தை உச்சரித்தபடியே செல்லுமாறு அவனுடைய தாயார் அவனுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி காட்டினுள் நுழைந்த அவன், அதன் அடர்த்தியால், மாலைப் பொழுதே இரவாகிவிட்ட முரணை கவனித்து உடனே அச்சம் கொண்டான். ஆனாலும் தாயார் சொன்ன அறிவுரைப்படி கடவுள் நாமத்தை உச்சரித்துக் கொண்டே சென்றான். இவ்வாறு உச்சரித்ததில் பக்தியைவிட தன்னை எந்த ஆபத்தும் சூழ்ந்துவிடக் கூடாதே என்ற சுயநல எச்சரிக்கை உணர்வுதான் மிகுந்திருந்தது.

ஆனால், அவனே அதிசயிக்கும் வகையில், மாலை கவிந்து இருள் சூழ்ந்தபோது, வானிலிருந்து நிலவின் தாரகைகள் அந்த அடர்ந்த காட்டினுள்ளும் ஊடாடி அவனுக்கு சற்றே வெளிச்சமான பாதையைக் காட்டின. கொஞ்சம் உற்சாகமானான். சிறிது தூரம் நடந்ததும், விலங்குகள் சில கர்ஜிக்கும் ஓசை கேட்டது. மறுபடியும் பயந்தான். அப்போது, ‘கவலைப்படாதே, அந்த விலங்குகள் உன்னை ஒன்றும் செய்யாது, தைரியமாக முன்னேறிப் போ,’ என்று யாரோ சொல்வதுபோலக் கேட்டது அவனுக்கு. சுற்று முற்றும் பார்த்த அவன் அந்தக் குரல் யாருக்குரியதாக இருக்கும் என்று சிந்தித்தான். புரியவில்லை.

ஒருவேளை தாயார் சொன்னபடி கடவுள் நாமத்தை உச்சரித்துக் கொண்டே வந்ததால், கடவுளே பேசுவதுபோல பிரமை தனக்குத் தோன்றியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான் அவன். இன்னும் சிறிது தூரம் சென்றபோது சற்றுத் தொலைவில் நாலைந்து வழிப்பறிக் கொள்ளையர் அமர்ந்திருந்ததைப் பார்த்தான். தன்னை அவர்கள் தாக்கக்கூடும் என்று பயந்தான். ஆனால் கூடவே ஒரு குரல், ‘பயப்படாதே. அவர்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள்,’ என்று கூறியது. வாலிபனுக்கு மறுபடியும் ஆச்சரியம். தயங்கிய படியே அவர்களை அவன் கடந்து சென்றபோது அவர்கள் மது அருந்தி மயங்கிக் கிடந்ததை கவனித்தான். இந்த ஆபத்திலிருந்தும் தப்பித்தாயிற்று. இன்னும் உற்சாகமானான்.

அந்த உற்சாகத்தில் சற்று விரைவாகவே நடந்த அவன், ஒரு பள்ளத்தை கவனிக்காமல் கால் இடறி உள்ளே விழுந்தான். அது ஏதோ அதல பாதாளம் என்று கருதிய அவன், தப்பித்துக் கொள்ள கைகளை நீட்ட, ஒரு மரத்தின் வலுவான வேர் கைக்குப் பட்டது. பளிச்சென்று அதைப் பற்றிக் கொண்ட அவன், காலடியில் ஸ்திர ஆதாரமில்லாமல் தொங்கிக் கொண்டிருந்தான். இப்போதும் ஒரு குரல் கேட்டது: ‘அஞ்சாதே, அந்த வேரிலிருந்து கைகளைவிடு. பாதுகாப்பாக குதிப்பாய்’. ஆனால் இம்முறை அவன் அந்தக் குரலுக்கு மதிப்பளிக்கத் தயாராக இல்லை. சந்தேகம். குரல் சொன்னபடி கையை விட்டுவிட்டால், கீழே எத்தனை அடி ஆழத்தில் போய் விழுவோமோ, உருத்தெரியாமல் சிதைந்து போய்விடுவோமோ என்று சந்தேகப்பட்டான்.

ஆகவே, வேரை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, ஏதேனும் மனித உதவி வரும்வரை அப்படியே தொங்கிக் கொண்டிருப்பது என்றும் முடிவு செய்தான். ‘யாரேனும் உதவிக்கு வாருங்களேன்…’ என்று முழு பலத்துடன் கத்தவும் செய்தான். நேரம்தான் கடந்ததே தவிர எந்த உதவியும் வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் களைத்தான். தொய்ந்தான். ஆனாலும் வேரைப் பற்றியபடியே தொங்கிக் கொண்டிருந்தான். பொழுது விடிந்தது. இன்னமும் அவன் தொங்கிக் கொண்டே இருந்தான். ஆனால் பயத்தாலும், களைப்பாலும் அவன் உயிர் அவனைவிட்டுப் பிரிந்திருந்தது. அவனுடைய காலடியில் மூன்றே அடி இடைவெளியில் பூமி அவனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது!

இவ்வாறு அவநம்பிக்கை, சந்தேகம், அதனால் தவறான முடிவு என்று வாழ்க்கையையே நரகமாக்கிக் கொண்டிருப்பவர்கள் பலர். தங்களுக்குள் பேசிக் கொண்டு போகும் இருவரைப் பார்க்கும் மூன்றாமவர், அவர்கள் தன்னைப் பற்றிதான் பேசிக் கொள்கிறார்கள் என்று சந்தேகக்கற்பனை செய்து கொள்கிறார். அவர்கள் பேசிக் கொள்வது தன்னைப் பற்றிய அவதூறு என்றும் அந்த கற்பனை அடுத்து விரிகிறது.

இப்படி ஆரம்பிக்கும் சந்தேகம், அந்த இருவரையும் தாண்டி அனைவர் மீதும் படர்கிறது. அது நட்பு, குடும்பம், பிற உறவுகள், சமுதாயம் என்று உலகளாவி வியாபிக்கிறது. ‘தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்….’ என்று தஞ்சை எஸ்.ராமையாதாஸ், ‘தெய்வப் பிறவி’ என்ற திரைப்படத்துக்காக எழுதிய பாடல் இதைத்தான் விவரிக்கிறது. இத்தகையவர்கள் இம்மைக்கு, அதாவது இப்போது பிறப்பெடுத்திருக்கும் வாழ்க்கைக்கு தகுதியுடையவர்கள் அல்லர். ஏனென்றால், யார் என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் அவையெல்லாம் தனக்கு விரோதமானவை, தனக்குக் கேடு செய்பவை என்றே அவர்கள் கருதுகிறார்கள்.

இப்படி உலகோரை நம்பாதவர்கள் எப்படி இந்த உலகத்துக்கு உரியவர் ஆவார்? இதில் வேடிக்கை என்னவென்றால், பிற யாரையும் நம்பாத ஒருவர், தன்னைப் பிறர் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான்? தினை விதைக்கப் பனையா முளைக்கும்?

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

The post தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் appeared first on Dinakaran.

Related Stories: