அதன்படி சில நாட்களில் வெங்குசாவிடம் ஒரு முஸ்லீம் சாதுவின் மனைவியால் பாபா ஒப்படைக்கப்பட்டார். பூரணத்தூய்மை, முழுமையான தன்னடக்கம், அசையாத நேர்மை, முழுவதும் உண்மையாக இருத்தல், கொடைக்குணம், மற்றவர்களுக்கு உதவும் சேவை ஆகிய குருவின் அத்தனை குணங்களும் பாபாவின் மனத்தில் ஆழப்பதிந்துவிட்டன. குரு சேவையை எல்லாவற்றிலும் சிறந்த சாதனையாகக் கருதி வந்தார்.
தாம் குருபூஜை செய்யும் போதோ, வேறு வேலையாக இருக்கும் போதோ, எல்லாச் சமயங்களிலும் அவர் அருகாமையிலேயே இருப்பார். வெங்குசா, அவருக்கு வாயைத் திறந்து எந்த விதமான உபதேசத்தையோ, கல்வியையோ போதிக்கவில்லை. எனவே, குரு போற்றும் சீடராக பாபா இருந்து வந்தார். பாபாவிடம் வெங்குசாவும் தன்னுடைய விசேஷ அன்பைக் காட்டி வந்தார். அது மற்றைய அணுக்கத் தொண்டர்களிடம் பொறாமையைத் தூண்டிவிட்டது. ஒரு ‘சாதுர்மாஸ்ய’ (ஆடி மாதம்) சமயத்தில், குருவிற்கு சில பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார் சீடர். அப்போது மூர்க்கர்கள் பாபாவின் மேல் செங்கற்களை வீசினார்கள். அவற்றுள் ஒரு கல் பாபாவின் தலைக்கு மிக அருகில் பறந்துவந்தது.
ஆனால், அதை குரு பார்த்துவிட்டார். அவருடைய ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டு கல், மேற்கொண்டு அசையாமல் அந்தரத்திலேயே நின்றது. மற்றொரு கல் விரைந்து வந்த போது, வெங்குசா குறுக்கே சென்று தம் தலையில் அந்த அடியைப் பெற்றுக் கொண்டார். அதனால் அவர் தலையில் காயம்பட்டு ரத்தம் பெருகியது. கண்ணீர் வடித்த பாபா, தம்மாலேதான் குருவிற்கு இந்தக் கஷ்டம் வந்தது என்று நினைத்தார்.
தம் ஆடையைக் கிழித்து அந்தத் துணியைக் கொண்டு குருதேவர் தம் காயத்திற்கு கட்டுப் போட்டு விட்டார். அந்த சமயத்தில், ‘நான் பிரிந்து செல்லும் காலம் நெருங்கிவிட்டது. நாளை மாலை நான்கு மணிக்கு இந்த உடலை விட்டுவிடுவேன். ஆகவே, என்னுடைய பூரண சக்தியையும் உன்னிடம் நிரப்புகிறேன்.
அங்கே நிற்கும் காராம் பசுவைக் கொண்டுவா’ என்று கூறினார். பாபா அந்தப் பசுவை மேய்த்துக் கொண்டிருந்த நபரிடம் அந்தப் பசுவைக் கேட்க, அவன் அதை ‘மலட்டுப் பசு’ என்று கூறினான். பாபா வேண்டிக் கொள்ள, மாடுமேய்ப்பவர், பசுவை குருவின் பக்கத்தில் கொண்டு வந்தான். அவர் அப்பசுவை கொம்புகளிலிருந்து வால்வரை தடவிக் கொடுத்து, மாடுமேய்ப்பவரிடம், ‘இப்போது பாலைக்கற’ என்று கூறினார்.
என்ன ஆச்சரியம்! மாடுமேய்ப்பவர் பசுவின் மடியைப் பிடித்தவுடன் பால் சுரந்து வந்தது. அந்தப் பாலை தன் இரண்டு கைகளால் வாங்கி பாபாவிடம் அளித்தார். குருவின் சக்தியால் ‘சக்திநிபாதம்’ நிகழ்ந்தது. (சக்தி – அருட்சக்தி, நிபாதம் – வீழ்தல்). குருவைத் தாக்கிய மூர்க்கன் அங்கேயே விழுந்து இறந்தான்.
மற்றவர்கள் பயந்து குருவிடம் தங்கள் செயலுக்கு மன்னிப்பு வேண்டினர். அப்பொழுது பாபாவிடம் ‘இறந்தவனை எழுப்பு’ என்று குரு ஆணையிட்டார். பாபா குருதேவரின் பாததூளியை எடுத்து இறந்தவன் உடலின் மீது தடவி, அவனை உயிர் பெறச் செய்தார். மறுதினம், குருதேவரின் வார்த்தைகளின் படியே குருதேவர் மஹாசமாதி அடைவதற்கு முன், பாபாவை மேற்கு திசையைக் காட்டி, அந்தத் திசையில் செல்லும்படி உத்தரவிட்டு சமாதியடைந்தார்.
அவர் காட்டிய திசைதான் சீரடி இருக்கும் திசை. பாபா சேலூவை விட்டுக் கிளம்புவதற்கு முன், குருதேவரின் தலையில் பட்ட ரத்தம் தோய்ந்த அந்தச் செங்கல்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அந்தச் செங்கல்லை எப்போதும் தன் கூடவே வைத்திருப்பார். தூங்கும் போது அதைத் தலையணையாக உபயோகிப்பார். உட்காரும் போது எப்போதும் அதன் மேலேயே கைவைத்திருப்பார். ‘இது என் வாழ்க்கைத் துணை’ என்று அடிக்கடி சொல்வார்.
இன்னொரு நிகழ்ச்சி, மத்வ சம்பிரதாயத்தில், கும்பகோணம் ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தரை வித்யா குருவாகவும், ஸ்ரீ ஸ்ரீபதி தீர்த்தரை, தீக்ஷா குருவாகவும் பெற்றவர் கம்பாளூ ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தர். இவர் ஸ்ரீ ராகவேந்திரரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தருடன் குருகுல வாசத்தில் உடன் பயின்றவர். வியாகரண சாஸ்திரத்தின் ஒரு பகுதியை ராகவேந்திரருக்குச் சொல்லித் தந்தவர். அவர் ஒருமுறை, வேலூர் பெண்ணாத்தூரில் சாதுர்மாஸ்ய விரதத்திற்காக தங்கியிருந்தார். தன்னுடைய வாதத்தால் துவைத தத்துவத்தை நிலை நாட்டி வந்தார். அவருடைய தத்துவப் பாடங்களைக் கேட்பதற்குக் கூடிய கூட்டம் சில பேர்களுக்கு கவலையாய் இருந்தது. எனவே, அவர் வழக்கமாக தியானம் செய்ய அமரும் மரத்தடிக்கு மேல், மரத்தின் மீது கல்லைக் கட்டி அவர் மீது அந்த கல் விழுவதற்காக ஏற்பாடு செய்தனர்.
சுவாமிகள் தியானத்தில் அமர்ந்ததும், சரியாக அந்தக் கல்லை அவர் மேல் விழும்படி செய்தனர். தியானத்திலிருந்து கொண்டே கல் வருவதைக் கவனித்த சுவாமிகள், ‘அந்தராலே திஷ்ட’ (அந்தரத்தில் நில்) என்று சொல்லி, அந்தக் கல்லை அப்படியே அந்தரத்திலேயே நிறுத்தி வைத்தார். கல்லைப் போட்டவர்கள் ஆச்சரியத்துடன் விழி பிதுங்கி நின்றனர். கல் எறிந்தவர்களைப் பிடித்த சுவாமியின் சீடர்கள், அவர் முன் நிறுத்தினர்.
அப்போது சுவாமிகள், ‘எனக்கு நல்லது செய்திருக்கிறார்கள்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். அது கேட்ட அவர்கள் சுவாமிகளின் திருவடிகளில் வணங்கி மன்னிப்பு கேட்டனர்.அன்றிலிருந்து அந்தக் கல்லை, பிருந்தாவன பிரவேசம் வரையிலும் அவர் எங்கெங்கு சென்றாரோ அங்கெல்லாம் அதை எடுத்துக் கொண்டு சென்றார். அவருடைய விருப்பத்தின்படியே, அந்தக் கல், அவருடைய பிருந்தாவனத்தின் மீது வைக்கப்பட்டிருக்கிறது. பின் வந்த ஆச்சாரியர்களில் ஒருவர், அந்தக் கல்லின் மீது ஆஞ்சநேயர் உருவத்தை செதுக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன்படி அந்தக் கல், ஆஞ்சநேயர் உருவத்துடன் இன்றும் காணப்படுகிறது. தன்னுடைய குரு ஸ்ரீபதி தீர்த்தரின் பிருந்தாவனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் வகையில், ராமச்சந்திர தீர்த்தரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனம், வேலூருக்கு அருகில் சேண்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இந்த சேண்பாக்கத்தில் உள்ள சோமநாதேஸ்வரர் கோயிலுக்கு, துவைதத்தின் பிரதம ஆச்சாரியர் ஸ்ரீமத்வர் விஜயம் செய்தார். அங்குள்ள வேத பண்டிதர்களுக்கு, விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் நாமமான ‘விச்வம்’ என்பதற்கு, நூறுக்கும் மேலான அர்த்தங்களை, வேத உபநிஷத பிரமாணத்தின்படி விளக்கம் செய்தருளினார் என்று ஸ்ரீ ஸுமத்வ விஜய மஹாகாவ்யம் கூறுகிறது. இதனால், சேண்பாக்கம் ‘மத்வ விஜய நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.
பின்னாளில், ஸ்ரீ வியாசராஜ ஆச்சாரியார் விஜயம் செய்த இந்த இடத்தில், சஞ்ஜீவிராயரான முக்ய பிராண சுவாமியை பிரதிஷ்டை செய்தார். பொதுவாக அவர் ஸ்தாபிக்கும் ஆஞ்சநேயர் உருவங்களிலிருந்து சிறிது வேறுபட்ட உருவத்தோடு அபிமுகமாக (நேர்முகமாக) இந்த விக்ரகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இருபெரும் ஆச்சாரியர்கள் விஜயம் செய்த சேண்பாக்கத்தை, ஸ்ரீ ஸ்ரீபதி தீர்த்தரும் அவர் சீடருமான கம்பாளூ ராமச்சந்திர தீர்த்தரும் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.
மேலும், ஸ்ரீ ராகவேந்திரர் திருப்பதி செல்லும் முன் இங்கே வந்து இருவருக்கும் பதினான்கு நாட்கள் பூஜை செய்து, குருசேவை செய்திருக்கின்றார் என்பதும் மகிழ்வான செய்தியாகும். அதன் பின், உத்தராதி மடத்து ஆச்சார்யர்கள் இங்கே வந்து பிருந்தாவனப் பிரவேசம் செய்ய, இப்போது ஸ்ரீ ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனத்தோடு, ‘நவபிருந்தாவனம்’ என்னும் சிறப்பைப்
பெற்றுத் திகழ்கிறது.
கம்பாளூ ராமச்சந்திர தீர்த்தர் மற்றும் பாபா ஆகிய இருவருக்கும் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ‘சாதுர்மாஸ்ய’ காலத்தில் நிகழ்ந்தன என்பதும், அந்தக் கற்களை அவர்கள் தங்களுடைய காலம் வரை போற்றிப் பாதுகாத்து வைத்திருந்தனர் என்பதும் நமக்குக் கிடைத்த அருள் அற்புதங்கள். பாபா மசூதியை விட்டு வெளியே சென்ற ஒரு சமயத்தில், மாதவ் பாஸ்லே என்ற பையன், மசூதியை பெருக்கிக் கொண்டிருந்தான். அப்போது, பாபா பயன்படுத்திய அந்தச் செங்கல்லின் மீது குப்பைகள் படாமல் இருக்க வேண்டும் என்று அதை எடுத்து அப்பால் வைக்க முயன்றான்.
ஆனால் அந்தச் செங்கல்லை அவன் எடுத்த போது, அது திடீரென்று தவறி விழுந்து இரண்டாக உடைந்துவிட்டது. இதை பாபா தெரிந்து கொண்டதும், அவர் மிகவும் மனம் தளர்ந்து, ‘உடைந்தது செங்கல் அல்ல. எனது விதியே துண்டுகளாக உடைந்துவிட்டது. அது என் வாழ்க்கைத் துணையாக இருந்தது. அதன் ஸ்பரிசத்துடன் நான் எப்பொழுதும் ஆத்ம தியானம் செய்தேன். அது என் உயிரே ஆகும். அது என்னை விட்டுப் பிரிந்து விட்டது’ என்று புலம்பி அழுதார்.
செங்கல்லைப் போன்ற ஒரு ஜடப்பொருளுக்கு பாபா ஏன் இவ்வளவு வருந்த வேண்டும். அவரைப் பொறுத்தவரை, அந்தக் கல் எப்பொழுதும் ‘வாழ்க்கைத் துணையாக காக்கும் கல்’லாக தொடர்ந்து வந்தது. அந்த நிகழ்வு, பாபாவின் மஹாசமாதிக்கான காரண நிகழ்வு என்று அப்பொழுது யாருக்கும் தெரியாது. அதற்குப் பின் சில தினங்கள் கழித்து பாபா மஹாசமாதியடைந்தார். அவதார புருஷர்கள் எப்பொழுதும் தாம் அவதரித்த நோக்கத்தின் மீது முழுவதும் விழிப்பாய் இருப்பார்கள். அவர்கள் எதையாவது செய்ய நினைத்தால், அதை வெளியே பகிரங்கமாகக் கூற
மாட்டார்கள்.
அவர்களின் ஆழ்ந்த எண்ணமே, நடக்கும் நிகழ்ச்சிகளை இயக்கும். எங்கும் நிறைந்தவர்களாகவும், எல்லாம் அறிந்தவர்களாகவும், எல்லாம் வல்லவர்களாகவும் இருப்பதால், அவர்களது திட்டத்தைச் செயல்படுத்துவதற்குரிய அனைத்து செயல்களும் இயற்கையாய் அமையும்.
காலகிரமத்தில் தாம், நாம் அதைப் புரிந்து கொள்ள இயலும். ‘எனது மஹாசமாதிக்குப் பிறகும் நீ என்னை நினைத்தவுடனே அந்த இடத்தில் நான் உன்னுடன் இருப்பேன்’ என்று கூறினார் பாபா. இன்றும் அவர் தமது வார்த்தைகளின் படியே செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.
முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
The post காக்கும் கல் appeared first on Dinakaran.