துலாம் ராசி குழந்தை

துலாம் ராசி, சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி என்பதாலும், அங்கு சனி உச்சம் பெறுவதாலும், துலாம் ராசியில் பிறக்கும் குழந்தைகள் இவ்விருவரின் பண்புகளையும் கொண்டு இருப்பது வழக்கம். பொதுவாக, துலாம் ராசி குழந்தைகள் நேர்மை, நீதி, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு, படிப்பு, இன்சொல் பேசுதல், பணிவு, மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்று நம்புதல், என்று அடக்க ஒடுக்கமுள்ள குழந்தைகளாக வளர்ந்துவருவர்.

கல்லூரிப் படிப்பில் சறுக்கல்

துலாம் ராசி குழந்தைகள் சிறுவயதில் ரசிக்கும்படி அனைவரும் பாராட்டும்படி இருந்துவிட்டு, கல்லூரிப் பருவத்தில் சற்று ஏறுக்கு மாறாகப் பெரியவர்களிடம் நடந்து கொள்வது உண்டு. சரியான படிப்பைத் தெரிவு செய்யாமல் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்துவிட்டு, பிறகு அந்த கோர்ஸ் படிக்க மாட்டேன் என்று இடையில் நிறுத்தி வேறு ஒரு கோர்ஸ் சேர்ந்து பிறகு அதுவும் பிடிக்காமல் ஊர் மாற்றி காலேஜ் மாற்றி, இதற்கிடையே சில பல காதல்களில் சிக்கி, பிரேக்கப் ஆகி, 21, 22 வயதில் மீண்டும் பழைய படி சிறப்பாகப் படித்து வேலைக்குப் போய், அழகாக வாழ்வில் செட்டில் ஆகிவிடுவார்கள்.

சனி சுக்கிரன் லீலைகள்

துலாம் ராசிக் குழந்தைகளில் சிலர் பருவ வயதில் சுக்கிரன் சனி ஆதிக்கத்தில் சிக்கி சின்னாபின்னம் ஆவதுண்டு. ஆனால் டீன் ஏஜ் முடிந்த பிறகு சரியாகிவிடுவர். கல்லூரியில் 15 அரியர்ஸ் வைத்தவர்கூட பிறகு ஒரு நல்ல தொழில் அதிபராக அல்லது வெளிநாட்டில் போய் கை நிறைய சம்பாதித்து இங்குள்ள ஏழை பாழைகளுக்கு செலவு செய்யும் வள்ளலாக மாறிவிடுவார்.

கலைவிழா நாயகர்

துலாம் ராசி மாணவர்களே, கல்லூரி கலை விழாக்களில் கதாநாயகர் கதாநாயகியாக இருப்பார்கள். ஆடல், பாடல், பேச்சு, ஓவியம், காவியம் என அனைத்திலும் பங்கேற்று பரிசு கோப்பைகளை பெற்று வந்து கல்லூரியின் ஷோகேஸ்களை நிரப்புவார்கள். படிப்பிலும் குறை வைக்க மாட்டார்கள். இவர்களின் ஆடலுக்கும், பாடலுக்கும் இவர்களை சுற்றி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். ஒரு கூட்டம் எட்ட நின்று ரசிக்கும். மறு கூட்டம் கிட்டே வந்து பாராட்டும். இவர்களைப் பற்றி தெரியாதவர்களே இவர்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரிலோ தெருவிலோ இருக்க இயலாது.

குடும்பப் பாசம்

துலாம் ராசி மாணவர் சுத்தம், சுகாதாரம், உடல்நலம், குடும்ப கவுரவம் இவற்றைக் காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருப்பார். நண்பர்கள் இவரிடம் `என்னடா உங்க அப்பா இப்படி பண்றாரு’ என்றெல்லாம் கேட்கக் கூடாது. கேட்க முடியாது. இவர் அப்பா இவரை கண்டிப்பதை இவர் வெளியே சொல்ல மாட்டார். அப்படியே சக நண்பர்கள் தெரிந்து கொண்டு அதைப் பற்றி விமர்சித்தால், அவர்கள் ஆரம்பிக்கும் போதே `இந்த பேச்சு வேண்டாம் பேசாதே’ என்று தடை உத்தரவு போட்டு விடுவார்.

தாய் – பிள்ளை உறவு

துலாம்ராசி குழந்தைகளின் தாய்மார், இக்குழந்தைகளுக்குத் தினமும் அழகழகாக உடை உடுத்தி, பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒரு நாள் போட்ட உடையை மறுநாள் அணிவித்தால் குழந்தைக்கு அது பிடிக்காது. எனவே இருக்கும் உடைகளில் நிறம் மாற்றியோ டிசைன் மாற்றியோ வெவ்வேறு விதமாக இன்று புதிதாய் பிறந்தோம் என்கின்ற வகையில் அந்த குழந்தைக்கு தலைமுடி அலங்காரம் செய்து விடுவது, உடை உடுத்தி விடுவது, ஷூ போட்டு விடுவது என்று புதிது புதிதாக எதையாவது அவர்கள் மனம் மகிழும் வகையில் தாய்மார்கள் செய்ய வேண்டும்.

இன்னிசைப் பிரியர்

ஏழை பணக்காரன் என்பது துலாம் ராசிக் குழந்தைக்கு முக்கியமல்ல. மதிப்பு, மரியாதை, அழகு, மகிழ்ச்சி, பாராட்டு, இன்சொல் இதுதான் முக்கியம். அம்மாவும் அழகாக உடை உடுத்தி சுத்தமாக இருக்க வேண்டும். இவர்கள் வீட்டில் இருக்கும்போது ஏதாவது பாட்டு பாடிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது இவர்களாவது பாடிக் கொண்டே இருப்பார்கள். இக்குழந்தைகளுக்கு தெய்வ பக்தி அதிகம் இருப்பதால் சாமி படங்கள் இருக்க வேண்டும் பூ படங்கள் இருக்க வேண்டும்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

துலாம் ராசி குழந்தைகளுக்கு, வீட்டில் அம்மாவும் அப்பாவும் தெய்வத்துக்கு சமாதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. அவர்களில் ஒருவருக்கொருவர் கடிந்து பேசுவதோ, வெறுத்துப்பேசுவதோ கூடாது. அப்படிப்பட்ட பெற்றோர் இருந்தால், இவர்கள் வெகு சீக்கிரத்தில் பெற்றோரை விட்டு விலகி ஹாஸ்டலிலோ அல்லது வேறு யாருடைய தயவிலோ படிக்கப் போய் விடுவர். இவர்களுக்கு வீடு என்பது சொர்க்கபுரியாக இருக்க வேண்டும்.

அறச்சீற்றம்

துலாம் ராசி குழந்தைகளுக்கு அறச்சீற்றம் அதிகம். சிரித்த முகத்துடன் இருக்கும் இவர்கள், முகம் ஒரு நொடியில் சிவந்து பார்வை கடுமையாகும். பெரியவர்கள் மனதில் நடுக்கம் ஏற்படும். இவர்களுக்கு அநியாயத்தைக் கண்டால் மட்டுமே கோபம் வரும். கோபம் வந்தால் அது அசுரத்தனமான கோபமாக இருக்கும். பள்ளிகளில் யாரேனும் ஒரு சிறுவன் ஒரு சக மாணவனுக்கு மதிப்பெண் கூட்டலில் குறைந்திருந்தால், உடனே அந்த விடைத்தாளை பெற்றுக் கொண்டு ஆசிரியரிடம் போய் கூட்டலில் தவறு ஏற்பட்டு இருக்கிறது என்று சுட்டிக் காட்டி சரியான மதிப்பெண் வாங்கி வந்து அந்த மாணவரிடம் கொடுத்து அவர் முகத்தில் புன்னகையை பார்ப்பது இவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.

எப்படி வளர்க்க வேண்டும்?

துலாம் ராசி / லக்கினக் குழந்தைகளை தினமும் ஒவ்வொரு வேளையும் மதித்துப் போற்றிப் பாராட்டி வளர்க்க வேண்டும். இவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாத காலங்கள் வரும். சில ஆண்டுகள் அப்படி இருந்தாலும், அந்த நேரத்திலும் இவர்களை உதவாக்கரை என்றோ தண்டச்சோறு என்றோ சொல்லக் கூடாது. அவர்கள் வேறு ஏதாவது ஒன்றில் ஆர்வமாக இருக்கலாம். அது வெளியே பெற்றோருக்குத் தெரியாமல் இருக்கும். அதன் பிறகு அவர்களே அதைச் சரி செய்து கொள்வார்கள். படிப்பில் ஏற்பட்ட தொய்வை அவர்களே சரி செய்து கொள்வார்கள். அவர்கள் படிக்கவில்லை மதிப்பெண் பெறவில்லை என்பதை எக்காரணம் கொண்டும்பெற்றோர்கள் சுட்டிக் காட்டக் கூடாது. இந்தக் குழந்தைகளைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டி வளர்த்து வந்தால் இவர்கள் இந்தப் பூவுலகின் நண்பர்களாகத் திகழ்வது உறுதி.

The post துலாம் ராசி குழந்தை appeared first on Dinakaran.

Related Stories: