இறைவன் ஈந்த வரையறை

மிகச் சிறந்த தையல்காரர்கள் மூன்று பேர் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் அதுவும் ஒரு குறிப்பிட்ட தெருவில் தங்கள் கடையை ஆரம்பித்தார்கள். அப்போது முதல் தையல்கடைக்காரர் தன் கடைக்கு முன்னால் ‘‘இந்த நகரத்திலேயே மிகச் சிறந்த தையல் கடை’’ என்று ஒரு விளம்பர போர்டை வைத்தார்.இதைப் பார்த்த இரண்டாவது கடைக்காரர் இதைவிட சிறப்பான விளம்பரப்பலகையை தான் வைக்க வேண்டும் எனக் கருதி, ‘‘இந்த உலகிலேயே மிகச் சிறந்த தையற்கடை’’ என்று எழுதி தன் கடையின் முன் அடுத்த நாள் வைத்திருந்தார்.மூன்றாவது கடைக்காரருக்கு ஒரு குழப்பம், இரண்டு பேரை விடவும் நாம் எப்படி சிறப்பான விளம்பரப்பலகையை வைக்க முடியும். ‘‘இந்த உலகிலேயே மிகச் சிறந்த தையற்கடை’’ என்று எழுதி வைத்துவிட்ட பிறகு, அதையும் தாண்டி ஒன்றை நம்மால் எழுதி வைக்க முடியுமா? என்ற சிந்தனையில் முடங்கிப்போனார்.

பின்னர் தன் மனதில் பட்ட ஒன்றை இரவோடு இரவாக ஒரு போர்டில் எழுதி கடையின் முன்பாக வைத்திருந்தார். அடுத்த நாள் காலையில் மூன்றாவது கடையில்தான் கூட்டம் அலைமோதியது. மற்ற இரண்டு கடைக்காரர்களும் அங்கு என்னதான் எழுதியிருக்கிறது என்று பார்க்க கடைக்கு முன் ஓடி வந்தார்கள். அங்கே இப்படியாக எழுதியிருந்தது ‘‘இந்த தெருவிலேயே மிகச் சிறந்த தையற்கடை.’’இறைமக்களே, சம்பவம் உணர்த்தும் செய்தியை உங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறதா? நாம் முதலில் நம்மைச் சார்ந்துள்ள குடும்பத்திற்கும், நம்மை சுற்றி வாழும் மக்களுக்கும் ஆசீர்வாதமாக மாற வேண்டும். ‘‘தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல’’ (2 கொரி.10:18) முதலில் தன் குடும்பத்தில் அல்லது தனது தெருவில் சாட்சியாக இருந்தால் மட்டுமே நாம் உலகத்துக்கு சாட்சியாக இருக்க முடியும். இந்த வரையறையை பரிசுத்த வேதாகமம் உறுதிப்படுத்துகிறது.

இயேசு கிறிஸ்து: ‘‘பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும் (சொந்த ஊர்), யூதேயா முழுவதிலும் (சொந்த மாகாணம்), சமாரியாவிலும் (அண்டை மாகாணம்), பூமியின் கடைசிப்பரியந்தமும் (உலகம் முழுவதும்), எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். (அப்.1:18)இக்காலத்தில் சிலர் உடனடியாக உலகளவில் பிரபலமாகிவிட வேண்டுமென துடிக்கிறார்கள். இத்தகைய மனநிலை அடிப்படையில் ஆபத்தானது. நீங்கள் எதிர்பார்க்கும் உச்சத்தை அடைய முதலில் நீங்கள் வார்த்தையிலும் நடத்தையிலும் சாட்சியுடையவர்களாக மாறுங்கள். அந்த தாக்கம் உங்கள் குடும்பத்தையும், கிராமத்தையும், தேசத்தையும் கூட மாற்றும் என்பதில் ஐயமில்லை. இறைவன் ஈந்த வரையறை இதயப்பூர்வமாக ஏற்போம்! இடைவிடாத ஆசி பெறுவோம்!!!
– அருள்முனைவர் பெவிஸ்டன்.

The post இறைவன் ஈந்த வரையறை appeared first on Dinakaran.

Related Stories: