ஆசிய கோப்பை சூப்பர்-4 சுற்று வங்கதேசம் – இலங்கை இன்று பலப்பரீட்சை

கொழும்பு: ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்று லீக் ஆட்டத்தில் வங்கதேசம் – இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்பு, பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது. உலக கோப்பை தொடருக்கான முனோட்டமாக அமைந்துள்ள இந்த தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற நிலையில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை வங்கதேசம் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சூப்பர்-4 சுற்றில் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. லாகூரில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது வங்கதேசம்.

இன்று தனது 2வது சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் களமிறங்கும் வங்கதேச அணி இலங்கையை எதிர்கொள்கிறது. ஏற்கனவே நடந்த முதற்கட்ட லீக் சுற்றில் இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்துள்ள வங்கதேசம் பதிலடி தருவதுடன் பைனல் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதே சமயம், இலங்கை அணி கடைசியாக விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள்ளதால் மிகுந்த உற்சாகத்துடன் வரிந்துகட்டுகிறது. இன்றைய ஆட்டத்தில் வென்றால், தொடர்ந்து 12 ஒருநாள் போட்டியில் வென்று 2வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகளின் சாதனையை இலங்கை சமன் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் தொடர்ச்சியாக 21 வெற்றிகளை வசப்படுத்திய ஆஸ்திரேலிய அணி முதலிடம் வகிக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவதும் தசுன் ஷனகா தலமையிலான இலங்கை அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

நேருக்கு நேர்…

* இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 52 ஒருநாள் போட்டிகளில் இலங்கை 41-9 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது (2 போட்டிகளில் முடிவு இல்லை).

* கடைசியாக மோதிய 5 போட்டிகளில் இலங்கை 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

* ஆசிய கோப்பை தொடர்களில் 16 ஆட்டங்களில் இந்த 2 அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதிலும் இலங்கை 13-3 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

* நடப்புத் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்த அணிகள் மோதிய ஆட்டத்தில் இலங்கை அணி 66 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது.

The post ஆசிய கோப்பை சூப்பர்-4 சுற்று வங்கதேசம் – இலங்கை இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: