கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு

புழல்: சோழவரம் தெற்கு ஒன்றியம், அன்னை இந்திரா நினைவு நகர் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு, 2 நாள் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் விளையாட்டு திடலில் நடைபெற்றது. இப்போட்டியில் செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர்.

முடிவில், கும்மிடிப்பூண்டி தண்டல் சேரி அணி முதல் இடத்திலும், பாடியநல்லூர் இரண்டாவது இடத்திலும், செங்குன்றம் அணி மூன்றாவது இடத்திலும், பாடியநல்லூர் ‘பி’ அணி நான்காவது இடத்திலும் வெற்றிபெற்றனர். இவ்வாறு, வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கும் விழா பாடியநல்லூர் விளையாட்டு திடலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

விழாவுக்கு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவருமான வே.கருணாகரன் தலைமை தாங்கி, முதல் இடத்தை பிடித்த அணி தலைவருக்கு ரூ.20,000மும், இரண்டாவது இடத்தை பிடித்த அணி தலைவருக்கு ரூ.10,000மும், மூன்றாவது இடத்தை பிடித்த அணி தலைவருக்கு ரூ.5,000மும், நான்காவது இடத்தை பிடித்த தலைவருக்கு ரூ.4,000ம் மற்றும் நினைவு கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்களை சிறப்பித்தார். நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அன்னை இந்திரா நகர் திமுக இளைஞரணி செயலாளர் சிவசங்கரன் செய்திருந்தார்.

The post கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: