பூக்களில் இவ்வளவு விஷயங்களா?

நன்றி குங்குமம் தோழி

‘பூக்கள் பூக்கும் தருணம்’ பாடலை கேட்கும் போதும், பூ வாசத்தை நுகரும் போதும் நம்மை அறியாமல் நம் மனதுக்குள் பூ வாசம் வீசும். பூக்கள் ரசிப்பதற்கு மட்டும் அழகல்ல… அவை பல அற்புத குணங்கள் கொண்டவை!

சாமந்திப்பூ: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சாமந்திப் பூக்களின் இதழ்களை சேர்த்து இரவு முழுக்க மூடி வைக்கவும். மறுநாள் காலை அந்த தண்ணீரில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெற்று இளமையான தோற்றம் கிடைக்கும்.

ரோஜா: பன்னீர் ரோஜா இதழ்களுடன், வேப்பிலை சேர்த்து அரைத்து, சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவினால், முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும். ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் இயற்கையான நிறம் பெறுவதுடன், பளபளப்பாகவும் மாறும்.

மல்லிகைப்பூ: ஒரு கப் மல்லிகைப்பூவுடன் 4 லவங்கம் சேர்த்து அரைத்து, சுத்தமான சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரால் குழைத்து, முகம், நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கி சீரான நிறம் பெறும்.

மகிழம்பூ: கைப்பிடி அளவு மகிழம் பூவை ஊற வைத்து அரைத்து, அத்துடன் அதே அளவு பயத்தம் மாவு கலந்து கோடைக்காலம் முழுவதும் சோப்புக்கு பதில் உபயோகித்தால், வெயிலினால் ஏற்படும் வேர்க்குரு, வேனல் கட்டிகளை விரட்டும்.

மரிக்கொழுந்து: மரிக்கொழுந்து சாறு, சந்தனத் தூள் தலா 2 டீஸ்பூன் கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சரும நிறம் கூடும்.

ஆவாரம் பூ: 100 கிராம் ஆவாரம்பூ, 50 கிராம் வெள்ளரி விதை, 50 கிராம் கசகசா பால் விட்டு விழுதாக அரைத்து முகம், கழுத்து, கை, கால்களுக்கு பேக் மாதிரி போட்டு, அரை மணி நேரம் கழித்து தண்ணீர் தொட்டு விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்தால் இயற்கையான சன் ஸ்கிரீன் மாதிரி செயல்படும்.

ஜாதிமல்லியும் முல்லையும்: ஜாதிமல்லி, முல்லை தலா 10 பூக்கள், 2 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்து முகம், உடம்பு முழுக்க தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு கடலை மாவு, பயத்த மாவு கலந்த குளியல் பொடி உபயோகித்துக் குளித்தால், வெயில் கால சரும பிரச்னைகளுக்கு தீர்வாகும்.

தாமரைப்பூ : தாமரை இதழ்களை சிறிது பால் விட்டு அரைத்து, உடல் முழுவதும் தடவி, சோப் உபயோகிக்காமல் குளித்தால், சரும துவாரங்களை இருக்கி, மென்மையாக்கும்.

தொகுப்பு: பா.கவிதா, சிதம்பரம்.

The post பூக்களில் இவ்வளவு விஷயங்களா? appeared first on Dinakaran.

Related Stories: