அண்ணாமலை முதல்வராவது இலவு காத்த கிளி கதை போன்றது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை முதல்வராவது இலவு காத்தக் கிளி கதை போன்றது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவை 1975ல் எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். ஏழைகளின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர். எம்.ஜி.ஆர் பாடல்கள் இன்றளவும் பட்டி தொட்டி எல்லாம் கேட்கிறது. ஆனால், இப்போது வருகிற திரைப்படங்களின் பெயர்கள் கூட ஒரு மாதத்தில் மறந்து விடுகிறது. பணத்திற்காக மட்டும் தற்போது இருக்கிற நடிகர்கள் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். எங்களுக்கெல்லாம் எம்ஜிஆர் ரோல் மாடலாக இருந்து வருகிறார். திரைத்துறையில் நல்ல கருத்துகளை சொன்னவர். அயோத்தி ராமல் கோயில் திறப்பு விழாவை பாஜ அரசியல் ஆக்குகிறது என்ற விமர்ச்சனம் எழுந்துள்ளது.

இதற்கு பதில் சொல்ல வேண்டியது வாக்காளர்கள் தான். மக்கள் தான் அதை தீர்மானிக்க வேண்டும். அரசியலில் ஓடாத மாடுகள் எல்லாம் இருக்கிறது. அதுகிட்ட நான் போகிறதில்லை. காளை மாட்டை தான் அடக்குவேன். எது எப்படி நடந்தாலும் தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை முதல்வராவது என்பது இலவு காத்த கிளி கதை போன்றது. அது நடக்காத விஷயம். தமிழ்நாட்டில் வளர பாஜ எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். அது அவர்கள் ஆசை. தமிழ்நாட்டில் துளிர் விட்டு வளர்ந்திருப்பது இரட்டை இலை தான். அதுகிட்ட தாமரை எல்லாம் மலர வாய்ப்பே இல்லை. பாஜவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளார்.

The post அண்ணாமலை முதல்வராவது இலவு காத்த கிளி கதை போன்றது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: